டெல்லி விமான நிலையத்தில் புனே புறப்பட தயாராக இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்பயணிகளை கீழே இறக்கிவிட்டு சோதனை

டெல்லி விமான நிலையத்தில் புனே புறப்பட தயாராக இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டு சோதனை நடந்தது.

Update: 2023-08-18 21:45 GMT

புதுடெல்லி, 

டெல்லி விமான நிலைய தொலைபேசி அழைப்பு மையத்துக்கு நேற்று காலை 7.30 மணியளவில் ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது.

அதில் பேசிய நபர், ''42-ம் எண் வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள யுகே971 என்ற எண் கொண்ட விமானத்தில் 3 குண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அவை இன்னும் ஒரு மணி நேரத்தில் வெடிக்கும்'' என்று கூறிவிட்டு, அழைப்பை துண்டித்தார்.

இதையடுத்து, விமான நிலையம் பரபரப்படைந்தது. அந்த குறிப்பிட்ட இடத்தில், விஸ்தாரா என்ற தனியார் விமான நிறுவனத்தின் விமானம் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த விமானம், காலை 8.30 மணிக்கு மராட்டிய மாநிலம் புனே செல்வதற்கு தயாராக இருந்தது.

விமானத்தில் பயணிகளும், ஊழியர்களும் ஏறி அமர்ந்திருந்தனர். வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, பயணிகளும், ஊழியர்களும் கீழே இறங்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். அனைவரும் கீழே இறங்கினர்.

விமானம் தனி இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு நாசவேலை தடுப்பு தொடர்பான சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனையில் சந்தேகத்துக்குரிய பொருள் எதுவும் சிக்கவில்லை. எனவே, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரிய வந்தது.

இச்சம்பவத்தை விஸ்தாரா நிறுவனம் உறுதி செய்தது. கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு சோதனைகளால் விமானம் தாமதம் ஆனதாக தெரிவித்தது.

சோதனைக்கு ஒத்துழைப்பு அளித்ததாகவும், பயணிகளுக்கு சிற்றுண்டி கொடுத்து கவனித்து கொண்டதாகவும் விஸ்தாரா நிறுவனம் கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்