துங்கா ஆற்றில் மூழ்கி பி.யூ. கல்லூரி மாணவர்கள் 2 பேர் சாவு
சிவமொக்காவில் துங்கா ஆற்றில் மூழ்கி பி.யூ. கல்லூரி மாணவர்கள் 2 பேர் இறந்தனர். மீன்பிடிக்க சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.;
சிவமொக்கா-
சிவமொக்காவில் துங்கா ஆற்றில் மூழ்கி பி.யூ. கல்லூரி மாணவர்கள் 2 பேர் இறந்தனர். மீன்பிடிக்க சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
பி.யூ.சி. மாணவர்கள்
சிவமொக்கா டவுன் வித்யா நகரை சேர்ந்தவர் முகமது (வயது19). அதேப்பகுதியை சேர்ந்தவர் அஞ்சும் (19). இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவர். முகமது, அஞ்சும் ஆகிய 2 பேரும் சிவமொக்கா டவுனில் உள்ள பி.யூ. கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தனர். இவர்கள் 2 பேரும் விடுமுறை நாட்களில் குருபரபாளையா பகுதியில் உள்ள துங்கா ஆற்றிற்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம்.
இந்தநிலையில், நேற்றுமுன்தினம் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டது. சிவமொக்கா டவுன் முழுவதும் சாலையோரம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில் முகமது, அஞ்சும் ஆகிய 2 பேரும் குருபரபாளையா பகுதியில் உள்ள துங்கா ஆற்றில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் ஆற்றில் வலையை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
ஆழமான பகுதிக்கு
அப்போது, முகமது ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதில் அவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்தார். இதனை கவனித்த அஞ்சும், முகமதுவை காப்பாற்ற சென்றார். அப்போது அவரும் தண்ணீரில் முழ்கினார். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் சிவமொக்கா தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு தொட்டபேட்டை போலீசாருடன் வந்தனர். பின்னர் அவர்கள் ஆற்றில் குதித்து 2 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, 4 மணி நேரம் போராடி முகமது, அஞ்சும் ஆகிய 2 பேரையும் தீயணைப்பு வீரர்கள் பிணமாக மீட்டனர்.
விசாரணை
பின்னர் 2 பேர்களின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தொட்டபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.