ஐசியூவில் கமலா பூஜாரியை நடனமாட வற்புறுத்திய சமூக ஆர்வலருக்கு பழங்குடியினர் கடும் கண்டனம்!
தீவிர சிகிச்சை பிரிவில் 72 வயதான கமலா பூஜாரி நடனமாடும் வீடியோ வைரலானது.
புவனேஸ்வர்,
பத்மஸ்ரீ விருது பெற்ற கமலா பூஜாரியை கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்வதற்கு முன்பு கட்டாயப்படுத்தி நடனமாட கூறிய சமூக சேவகர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஒடிசாவில் உள்ள பராஜா பழங்குடியின சமூகத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிறுநீரகக் கோளாறு காரணமாக கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் கமலா பூஜாரி அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவரை சந்திக்க சென்ற சமூக ஆர்வலர் மம்தா பெஹரா அவருடன் சேர்ந்து நடனமாடினார் இந்த வீடியோ வைரலானது.
அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் 72 வயதான கமலா பூஜாரி நடனமாடும் வீடியோ வைரலானதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. சமூக சேவகர் மம்தா பெஹராவும் அவருடன் நடனமாடினார்.திங்கட்கிழமை அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு முன்னதாக இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து கம்லா பூஜாரி கூறும் போது, "நான் ஒருபோதும் நடனமாட விரும்பவில்லை, ஆனால் அதைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நான் பலமுறை மறுத்தேன், ஆனால் அவர் (பெஹெரா) கேட்கவில்லை. நான் உடல்நிலை சரியில்லாமல் சோர்வடைந்தேன்" என்று பூஜாரி கூறினார்.
சமூக சேவகர் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால், பழங்குடியினர் சமூகத்தின் சங்கமான 'பராஜா சமாஜா போராட்ட்த்தில் குதிக்கும் என அதன் தலைவர் ஹரிஷ் முதுலி கூறினார்.
ஆதிவாசி சங்க உறுப்பினர் நரேந்திர கண்டலியா செட் தலைமையில் இன்று பெண் சமூக சேவகர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரஜா சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நரேந்திர கண்டலியா செட் கூறும் போது, "பூஜாரி எங்கள் சமூகத்தின் பெருமை மற்றும் உத்வேகம்.அதை வன்மையாக கண்டிக்கிறோம். இது நமது சமூகத்தை அவமதிக்கும் செயலாகும்.அவர் நடனமாட நிர்ப்பந்திக்கப்பட்ட விதம், சமூக சேவகர் என்று அழைக்கப்படுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம்.
சமூக சேவகர் என்று தன்னைத் தானே சொல்லிக் கொள்ளும் பெண் சமூக சேவகர் மீது நடவடிக்கை எடுக்க அரசு தவறினால், அடுத்த சில நாட்களில் நாங்கள் மாபெரும் போராட்டத்தை நடத்துவோம்" என்றார்.
ஜெய்பூர் சப்-கலெக்டர் பி.பி.பிரதான் கூறுகையில், இந்த பிரச்சனை குறித்து தீவிர விசாரணை நடைபெறுகிறது என்றார். இந்த வழக்கு மனித உரிமை மீறலாகும் என்று தெரிவித்தார்.