மந்திரி பதவி கிடைக்காததால் கடும் அதிருப்தி; காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

மந்திரி பதவி கிடைக்காததால் காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-05-27 18:45 GMT

பெங்களூரு:

மந்திரி பதவி கிடைக்காததால் காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு கடந்த 20-ந் தேதி அமைந்தது. அப்போது 9 மந்திரிகள் பதவி ஏற்றனர். இந்த நிலையில் நேற்று புதிதாக 24 மந்திரிகள் பதவி ஏற்றனர். இதையடுத்து மந்திரிசபையில் உள்ள மொத்த இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. இந்த முறை மந்திரிசபையில் 9 புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் எம்.எல்.ஏ.க்கள் பலருக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். சிலரின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

தன்வீர்சேட்டின் ஆதரவாளர்கள் மைசூருவிலும், எம்.கிருஷ்ணாப்பாவின் ஆதரவாளர்கள் பெங்களூருவில் கவர்னர் மாளிகை முன்பும், ருத்ரப்பா லமாணியின் ஆதரவாளர்கள் ஹாவேரியிலும், புட்டரங்கஷெட்டியின் ஆதரவாளர்கள் சாம்ராஜ்நகரிலும், ஜெயச்சந்திராவின் ஆதரவாளர்கள் பெங்களூருவிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தன்வீர்சேட்டின் ஆதரவாளர்கள் மைசூரு காந்தி சர்க்கிளில் ஆர்ப்பாட்டம் நடத்தி, 6 முறை எம்.எல்.ஏ.வாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள தன்வீர்சேட்டுக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

சரியாகிவிடும்

விஜயநகர் தொகுதி எம்.எல்.ஏ. எம்.கிருஷ்ணப்பாவின் ஆதரவாளர்கள், பதவி ஏற்பு விழா நடைபெற்று கொண்டிருந்தபோது, கவர்னர் மாளிகைக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிருஷ்ணப்பாவுக்கு மந்திரி பதவி வழங்காததை கண்டித்து அவர்கள் முழக்கமிட்டனர். லம்பாணி சமூகத்தை சேர்ந்த ருத்ரப்பா லமாணியின் ஆதரவாளர்கள் ஹாவேரியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் ருத்ரப்பா லமாணிக்கு மந்திரி பதவி வழங்காததை கண்டித்து கோஷங்களை எழுப்பி தங்களின் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர்.

ஜெயச்சந்திராவின் ஆதரவாளர்கள் பெங்களூருவில் உள்ள முதல்-மந்திரியின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி தங்களின் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். மூத்த எம்.எல்.ஏ.க்களுக்கு அதிருப்தி ஏற்பட்டாலும், அடுத்த சில நாட்களில் அது சரியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காங்கிரஸ் அரசுக்கு எந்த நெருக்கடியும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

எம்.எல்.சி. பதவி ராஜினாமா

மந்திரி பதவி கிடைக்காததால் பகிரங்கமாகவே அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள விஜயானந்த் காசப்பண்ணவர், 'எனக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தேன். ஆனால் எனது அரசியல் விரோதிகள் எனக்கு மந்திரி பதவி கிடைக்காமல் செய்துள்ளனர். மந்திரி பதவி கிடைத்தால் நான் வளர்ந்துவிடுவேன் என்ற பயம் அவர்களுக்கு உள்ளது. அவர்களுக்கு வயிற்றெரிச்சல். அதனால் எனக்கு எதிராக செயல்படுகிறார்கள். இதையும் மீறி மந்திரி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் எனக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது' என்றார்.

கர்நாடக மேல்-சபை எதிர்க்கட்சி தலைவராக உள்ள பி.கே.ஹரிபிரசாத், மந்திரி பதவி கிடைக்காததை அடுத்து தனது எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்வதாக தகவல் வெளியானது. அவரை சமாதானப்படுத்திய காங்கிரஸ் தலைவர்கள், மேல்-சபை தலைவர் பதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

வாரிய தலைவர்கள் நியமனம்

மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய வாரிய தலைவர் பதவி வழங்க சித்தராமையா திட்டமிட்டுள்ளார். இன்னும் ஓரிரு மாதத்தில் வாரிய தலைவா்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்