சம்பள உயர்வு கோரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் தர்ணா

சம்பள உயர்வு கோரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

Update: 2023-01-24 21:37 GMT

பெங்களூரு:

சம்பள உயர்வு, பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்த்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடக அரசு போக்குவரத்து கழக (கே.எஸ்.ஆர்.டி.சி.) ஊழியர்கள் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்.

தலைநகர் பெங்களூரு, மைசூரு, உப்பள்ளி-தார்வார், மங்களூரு, பெலகாவி, பல்லாரி உள்பட மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த போராட்டம் நடைபெற்றது. பெங்களூருவில் நடைபெற்ற போராட்டத்திற்கு போக்குவரத்து கழக ஊழியர்கள் கூட்டமைப்பு தலைவர் அனந்த சுப்பாராவ் தலைமை தாங்கினார். இதில் ஊழியர்கள் குறைந்த எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்றாலும், பஸ்கள் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வழக்கம் போல் 96 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டதாக கே.எஸ்.ஆர்.டி.சி. தெரிவித்துள்ளது.

போராட்டம் குறித்து அரசு போக்குவரத்து ஊழியர்கள் கூட்டமைப்பு தலைவர் அனந்த சுப்பராவ், "நாங்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் போராட்டம் நடத்துகிறோம். ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும். சம்பள உயர்வு கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும். சம்பளத்தை உயர்த்துவதாக அரசு உறுதியளித்தது. அந்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றவில்லை. அதனால் போக்குவரத்து கழக ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்