தனியார் கல்லூரி பேராசிரியருக்கு ஆயுள் தண்டனை; உப்பள்ளி கோர்ட்டு தீர்ப்பு
உப்பள்ளியில் மனைவியை கொலை செய்த வழக்கில் தனியார் கல்லூரி பேராசிரியருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.;
உப்பள்ளி;
தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே வித்யாநகர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் காம்ளே (வயது 36). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீஷீமா என்ற பெண்ணை காதலித்து கடந்த 2012-ம் ஆண்டில் திருமணம் செய்து இருந்தார்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது உதயகுமார், கத்தியால் மனைவி ஸ்ரீஷீமாவை சரமாரியாக குத்தினார்.
இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வித்யாநகர் போலீசார் உதயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக உப்பள்ளி கோர்ட்டிலும் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு உப்பள்ளி கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நீதிபதி சித்தண்ணா தீர்ப்பு வழங்கினார். அப்போது உதயகுமார் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.55 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.