சிறை கைதிகள் மன அழுத்தத்தை குறைக்க யோகா செய்யவேண்டும்
சிறை கைதிகள் மன அழுத்தத்தை குறைக்க யோகா செய்யவேண்டும் என்று தம்மையா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
சிக்கமகளூரு:-
சிக்கமகளூரு மாவட்ட சிறைச்சாலையில் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பிரம்மாகுமாரிகள் அமைப்பு சார்பில் கைதிகளுக்கு யோகா கற்றுக்கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தம்மையா எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
சிக்கமகளூரு சிறைச்சாலையில் சிலர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனைகளை அனுபவித்து வருகின்றனர். சிலர் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் சந்தர்ப்ப சூழ்நிலையால் தண்டனை அனுபவித்து வருகின்றனர். உங்கள் அனைவருக்கும் மன அழுத்தம் இருக்க கூடும். உங்கள் மன அழுத்தத்தை குறைப்பதற்காகத்தான் இந்த யோகா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினமும் யோகா செய்தால் உங்கள் மன அழுத்தம் குறையும். தவறு செய்தவர்கள், மனம் திருந்தி வாழ இந்த யோகா வழிவகை செய்யும். அதேபோல மனம் திருந்திய கைதிகளுக்கு, விரைவில் கோர்ட்டு மூலம் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். சிறைச்சாலை என்பது தண்டனைக்குரிய இடம் மட்டுமில்லை. தவறு செய்தவர்களை திருத்தி நல்வழிப்படுத்துவதற்கான ஒரு பாடசாலையாகும். இங்கிருந்து நீங்கள் செல்லும்போது நல்லவராகத்தான் செல்லவேண்டும். அனைவரும் ஒருநாள் விடுதலையாககூடியவர்கள்தான். எனவே கைதிகள் உடல் நிலையை சரியாக பார்த்து கொள்ளவேண்டும். சிறையில் கொடுக்கும் உணவுகளை தவறாமல் சாப்பிடவேண்டும். மேலும் கைதிகள் எப்போதும் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் விட்டுவிடக் கூடாது. கைதிகளை பார்க்கவரும் உறவினர்கள், வெயிலில் காத்திருக்கவேண்டிய நிலை இருப்பதாக புகார்கள் வருகிறது. இனி இந்தநிலை ஏற்பட கூடாது. சிறைச்சாலையின் வெளியே கைதிகளின் உறவினர்கள் அமர்ந்து இருப்பதற்கு வழிவகை செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.