நெல்லை - சென்னை வந்தே பாரத் ரெயில் சேவை - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..!

தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் 9 வந்தேபாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

Update: 2023-09-24 07:44 GMT

புதுடெல்லி,

அதிவேகத்தில், உலத்தரம் வாய்ந்த வசதிகளுடன் ஒரு சொகுசு பயணம் என்கிற அடிப்படையில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது நாடு முழுவதும் 25 வழித்தடங்களில் 50 ரெயில்கள் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் நெல்லை-சென்னை வழித்தடம் உள்பட மொத்தம் 11 மாநிலங்கள் பயன்பெறும் வகையில் இயக்கப்படும் 9 புதிய வந்தே பாரத் ரெயில்களின் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நெல்லை-சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நெல்லையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை வந்தடையும். சென்னையில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்படும் ரெயில் நெல்லைக்கு இரவு 10.40 மணிக்கு வந்தடையும். நெல்லையில் நடைபெற்ற விழாவில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்தனர்.

உதய்பூர்-ஜெய்ப்பூர், ஐதராபாத்-பெங்களூரு, விஜயவாடா-சென்னை(ரேணிகுண்டா வழியாக), பாட்னா-ஹவுரா, காசர்கோடு-திருவனந்தபுரம், ரூர்கேலா-புவனேஸ்வர்-பூரி, ராஞ்சி-ஹவுரா, ஜாம்நகர்-ஆமதாபாத் ஆகிய வழித்தடங்களில் புதிய ரெயில்கள் இயங்க உள்ளன. இதன்மூலம் தமிழ்நாடு, ராஜஸ்தான், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகம், பீகார், மேற்கு வங்காளம், கேரளா, ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய 11 மாநிலங்கள் பயன்பெறுகிறது.

மேற்கண்ட வழித்தடங்களில் தற்போதுள்ள அதிவேக ரெயில்களுடன் ஒப்பிடும்போது ரூர்கேலா-புவனேஸ்வர்-பூரி ரெயில் மற்றும் காசர்கோடு-திருவனந்தபுரம் ரெயில் ஆகியவை சுமார் 3 மணி நேரம் வேகமாக இருக்கும். ஐதராபாத்-பெங்களூரு ரெயில் 2½ மணி நேரமும், நெல்லை-மதுரை-சென்னை ரெயில் சுமார் 2 மணி நேரமும், ராஞ்சி-ஹவுரா ரெயில், பாட்னா-ஹவுரா ரெயில் மற்றும் ஜாம்நகர்-ஆமதாபாத் ரெயில் ஆகியவை சுமார் 1 மணி நேரமும், உதய்ப்பூர் - ஜெய்ப்பூர் ரெயில் சுமார் அரைமணி நேரமும் மற்ற எக்ஸ்பிரஸ் ரெயில்களைவிட வேகம் கொண்டதாக இருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்