பொன்னாடு உருவாக்கம்: ஒவ்வோர் இந்தியருக்கும் ஊக்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்தது பிரதமர் மோடி உரை; மத்திய மந்திரி அமித்ஷா
பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை ஒவ்வோர் இந்தியரையும் பொன்னாடு உருவாக்கத்தில் பங்காற்ற ஊக்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. எனினும், கடந்த ஓராண்டாக சுதந்திர தின அமுதப்பெருவிழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
இந்த சூழலில், இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமுடன் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, பிரதமர் மோடி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு நேற்று காலையில் சென்று மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.
தேசியக்கொடி வண்ணத்திலான தலைப்பாகை அணிந்து வந்திருந்த பிரதமர் மோடி, பின்பு டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து அதற்கு வணக்கம் செலுத்தினார். இதனையொட்டி வானில் ஹெலிகாப்டர்கள் பூக்களை தூவியபடி சென்றன. இதன்பின்னர், பிரதமர் மோடி சுதந்திர தின உரையாற்றினார்.
அவர் பேசும்போது, இந்த சுதந்திர தினத்தில் அனைத்து இந்தியர்களுக்கும் மற்றும் இந்தியா மீது அன்பு கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். ஒரு புதிய திசையில், ஒரு புதிய தீர்மானத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டிய தினம் இன்று என்று பேசினார்.
இந்த தினத்தில், கடமையை செய்யும் பணியில் தங்களது உயிரை ஈந்த தலைவர்கள், பெண்கள் மற்றும் எண்ணற்ற புரட்சியாளர்களுக்கு நாடு நன்றி செலுத்துகிறது என அவர் பேசியுள்ளார்.
சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவின்போது, நம்முடைய தேசத்தின் பல்வேறு நாயகர்களை நாம் நினைவுகூர்ந்தோம். ஆகஸ்டு 14-ந்தேதி பிரிவினையின் பயங்கரங்களை நாம் நினைவுகூர்ந்தோம். இன்றைய நாள் (ஆகஸ்டு 15-ந்தேதி), கடந்த 75 ஆண்டுகளாக நமது நாட்டை முன்னோக்கி எடுத்து செல்ல பங்காற்றிய நாட்டின் அனைத்து குடிமக்களையும் நினைவுகூர வேண்டிய நாள்.
நாட்டு விடுதலைக்காக போராடிய அல்லது தேச கட்டமைப்பு பணியில் ஈடுபட்ட பெருந்தகையாளர்களின் முன் தலை வணங்க வேண்டிய தினம் இன்று என அவர் பேசினார்.
ஜனநாயகத்தின் அன்னையான இந்தியா, தனது 75 ஆண்டுகால பயணத்தில் பல சவால்களை சந்தித்ததுடன், தன்னகத்தே விலை மதிப்பில்லா திறமையை கொண்டுள்ளது என நிரூபித்து உள்ளது என்றும் குடிமக்கள் எடுத்து கொள்ள வேண்டிய 5 உறுதிமொழிகள் பற்றியும் பேசினார்.
இதுபற்றி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பிரதமர் மோடி செங்கோட்டையில் இருந்து ஓர் அற்புத உரையை வழங்கியுள்ளார். அது ஒவ்வோர் இந்தியனையும், பொன்னாடு உருவாக்கத்தில் பங்காற்ற ஊக்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
நாட்டின் வளத்திற்காக தீர்மானத்துடன் பணியாற்றுவதுடன், முன்னேற்றத்திற்கு தடைகளாக உள்ள சவால்களை ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என நாட்டு மக்களுக்கு மோடிஜி அழைப்பு விடுத்து உள்ளார் என தெரிவித்து உள்ளார்.
தொடர்ந்து அமித்ஷா வெளியிட்டுள்ள செய்தியில், சுதந்திர தின அமுத பெருவிழா காலத்தில் 5 உறுதிமொழிகளை நாட்டின் குடிமக்கள் எடுத்து கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி செங்கோட்டையில் பேசியுள்ளார்.
அந்த 5 உறுதிமொழிகள், முன்னேறிய இந்தியா, அடிமைத்தனத்தின் ஒவ்வொரு சுவடில் இருந்தும் விடுதலை, நம்முடைய பாரம்பரியத்தில் பெருமை கொள்வது, ஒற்றுமையுடனும் ஆதரவுடனும் இருப்பது மற்றும் குடிமகன்களாக கடமைகளை நிறைவேற்றுவது ஆகியவற்றை பிரதமர் குறிப்பிட்டு உள்ளார்.
அதனால், அடுத்த 25 ஆண்டுகளுக்கு, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களின் கனவை மெய்ப்பிக்கும் இந்தியாவை உருவாக்குவதில் நாம் அனைவரும் பங்காற்றுவோம் என்று அமித்ஷா தெரிவித்து உள்ளார்.