வருகிற 2-ந் தேதி பிரதமர் மோடி, மங்களூரு வருகை

பிரதமர் மோடி, வருகிற 2-ந்தேதி மங்களூரு வருகிறார். இதனால் முன்னேற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-08-23 23:45 GMT

மங்களூரு,

பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த மாதம்(செப்டம்பர்) 2-ந்தேதி தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவுக்கு ஒருநாள் சுற்றுப்பயணமாக வருகிறார். அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி தட்சிண கன்னடா மாவட்டத்தில் முன்னேற்பாடுகள், பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதுதொடர்பாக தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் ராஜேந்திரா தெரிவித்ததாவது:-

பிரதமர் நரேந்திர மோடி, வருகிற 2-ந்தேதி மங்களூருவுக்கு வருகை தருகிறார். இங்குள்ள புதிய மங்களூரு கப்பல் துறைமுகத்தில் சாகர்மாலா திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். உள்நாட்டு விமானம் தாங்கி போர்கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த்தை திறந்து வைக்கிறார்.

மேலும் அனகா சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். பின்னர் கூளூரில் உள்ள கோல்ட்பிஞ்ச் மைதானத்தில் நடைபெறும் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றுவார். இதையடுத்து அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துகொண்டு பிரதமர் மோடி, மாலை தனி விமானம் மூலம் ெடல்லி செல்கிறார்.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு தட்சிண கன்னடா மாவட்டத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட முன்னேற்பாடுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ பயணத்திட்டம் ஓரிரு நாளில் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய மங்களூரு துறை முகத்திற்கு, பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி அடிக்கல் நாட்டினார். பின்னர் 1975-ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி, துறைமுகத்தை திறந்து வைத்தார். தற்போது பிரதமர் மோடி, சாகர்மாலா திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட புதிய மங்களூரு துறைமுகத்திற்கு வருகிறார். இதனால் புதிய மங்களூரு துறைமுகத்தை, 3-வது பிரதமராக மோடி பார்வையிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்