பிரதமர் மோடி 19-ந் தேதி கலபுரகி வருகை
ஒரே மாதத்தில் 2-வது முறையாக பிரதமர் மோடி வருகிற 19-ந் தேதி கலபுரகி வருகை தர உள்ளார். இதுபோல், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும் கர்நாடகத்திற்கு வருகை தர உள்ளனர்.
பெங்களூரு:-
19-ந் தேதி பிரதமர் வருகை
கர்நாடகத்தில் இன்னும் 5 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று கர்நாடகத்தில் ஆட்சியை தக்க வைத்து கொள்ள பா.ஜனதா தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக கர்நாடகத்திற்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை
மந்திரி அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.
பிரதமர் மோடி, கடந்த 12-ந் தேதி உப்பள்ளிக்கு வந்திருந்தார். தேசிய இளைஞர் திருவிழாவை அவர் தொடங்கி வைத்து பேசி இருந்தார். இந்த நிலையில், வருகிற 19-ந் தேதி பிரதமர் மோடி மீண்டும் கர்நாடகம் வருகை தர உள்ளார். அதாவது கலபுரகி மாவட்டத்திற்கு பிரதமர் மோடி வருகிற 19-ந் தேதி வருகிறார். கலபுரகி மாவட்டம் சேடம் டவுனில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள உள்ளார்.
உத்தரபிரதேச முதல்-மந்திரி
கர்நாடக வருவாய்த்துறை சார்பில் கலபுரகி, விஜயாப்புரா, ராய்ச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 51 ஆயிரத்து 90 தாண்டா குடும்பத்தினருக்கு, பிரதமர் மோடி உரிமம் பத்திரத்தை வழங்க உள்ளார். சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த மாதத்தில் 2-வது முறையாக பிரதமர் மோடி கர்நாடகம் வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகத்தில் முகாமிட்டு, தேர்தல் பணிகளில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்த மாத இறுதியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் கர்நாடகத்தில் முகாமிட்டு, கட்சிக்கு ஆதரவு திரட்ட உள்ளனர். தென்இந்தியாவின் நுழைவு வாயிலாக கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெறுவதால், இங்கு ஆட்சியை தக்க வைத்து கொள்ள தலைவர்கள் தொடர்ந்து படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.