அயோத்தியில் புதிய விமான நிலையம், ரெயில் நிலையத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Update: 2023-12-30 01:57 GMT

அயோத்தி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்டமான ராமர் கோவில், அடுத்த மாதம் 22-ந் தேதி திறக்கப்படுகிறது. அங்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக, அயோத்தியில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. அந்த விமான நிலையத்தையும், புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரெயில் நிலையத்தையும் பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) திறந்து வைக்கிறார்.

அவர் இன்று காலை 10.45 மணியளவில், விமானம் மூலம் அயோத்திக்கு வந்து சேருகிறார். அங்கிருந்து நேராக புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரெயில் நிலையத்துக்கு செல்கிறார்.

ரெயில் நிலையம்வரை உள்ள 15 கி.மீ. தூரத்துக்கு வாகன பேரணியாக (ரோடு ஷோ) செல்கிறார். சாலையின் இருபுறமும் அவரை வரவேற்க தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு நிற்பார்கள். அவர்களை பார்த்து கையசைத்தபடி பிரதமர் செல்வார். அவர் செல்லும் பாதைகளில் போலீசார் தற்காலிக மரத்தடுப்புகளை வைத்துள்ளனர்.

பின்னர் புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரெயில் நிலையத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி, 2 அம்ரித் பாரத் ரெயில்கள், 6 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆகியவற்றை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இதையடுத்து மீண்டும் அயோத்தி விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி வருகிறார். விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். விமான நிலையம் அருகே பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார். அயோத்தி நகருக்கான ரூ.11 ஆயிரம் கோடி திட்டப்பணிகளையும், பிற மாவட்டங்களுக்கான ரூ.4 ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.

ராமர் கோவிலுக்கு செல்லும் 4 பாதைகள் அகலப்படுத்தப்பட்டு, அழகுபடுத்தப்பட்டுள்ளன. ராம பாதை, பக்தி பாதை, தர்ம பாதை, ராமஜென்மபூமி பாதை என்ற 4 பாதைகளையும் திறந்து வைக்கிறார். பொதுக்கூட்டத்தில், ஒன்றரை லட்சம்பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய மந்திரிகள் அஸ்வினி வைஷ்ணவ், ஜோதிர்ஆதித்ய சிந்தியா, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்