பெங்களூருவில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி

பெங்களூருவில் ரூ.4,229 கோடி மதிப்பிலான கே.ஆர்.புரம்-ஒயிட்பீல்டு இடையேயான மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கிவைத்த பிரதமர் மோடி ,மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் மாணவிகள், மெட்ரோ ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.

Update: 2023-03-25 20:57 GMT

பெங்களூரு:

ரூ.4,229 கோடி மதிப்பில்...

கர்நாடக சட்டசபை தேர்தல் மே மாதத்தில் நடைபெற உள்ளதால் பிரதமர் மோடி அடிக்கடி கர்நாடகத்திற்கு வருகை தந்து வளர்ச்சி பணிகள், புதிய திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். இந்த நிலையில், பெங்களூருவில் கே.ஆர்.புரம் மற்றும் ஒயிட்பீல்டு இடைேய 13.71 கிலோ மீட்டருக்கு புதிய மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.4,229 கோடி மதிப்பில் இந்த மெட்ரோ பாதை அமைக்கப்பட்டு இருந்தது. இதற்கான பணிகள் மற்றும் சோதனை ஓட்டம் நிறைவு பெற்றிருந்தது.

இதையடுத்து, கே.ஆர்.புரம்-ஒயிட்பீல்டு இடையிலான மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி 25-ந் தேதி (அதாவது நேற்று) தொடங்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நேற்று காலையில் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வந்தார்.

மோடி தொடங்கி வைத்தார்

எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக சிக்பள்ளாப்பூருக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு மருத்துவ கல்லூரியை தொடங்கி வைத்துவிட்டு ஒயிட்பீல்டுக்கு வந்தார். பின்னர் கே.ஆர்.புரம் மற்றும் ஒயிட்பீல்டு இடையிலான மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். முன்னதாக அவரே டிக்கெட் கவுண்ட்டருக்கு சென்று டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் அங்கிருந்து நடந்து படிக்கட்டுகள் வழியாக நடைமேடைக்கு வந்தார். அதன்பிறகு, ஒயிட்பீல்டு ரெயில் நிலையத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரம் மெட்ரோ ரெயிலில் பிரதமர் மோடி பயணம் செய்தார்.

அவருடன் அமர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் மெட்ரோ ரெயில் ஆண், பெண் ஊழியர்களும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த போது மாணவ, மாணவிகள் மற்றும் மெட்ரோ ரெயில் ஊழியர்களுடன் பிரதமர் மோடி கனிவுடன் கலந்துரையாடினார். இதனால் மாணவ, மாணவிகள், மெட்ரோ ரெயில் ஊழியர்கள் உற்சாகம் அடைந்தார்கள். அப்போது பிரதமருடன், கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

12 ரெயில் நிலையங்கள்

கே.ஆர்.புரம்-ஒயிட்பில்டு இடையிலான மெட்ரோ வழித்தடத்தில் ஒட்டு மொத்தமாக 12 ரெயில் நிலையங்கள் உள்ளன. கே.ஆர்.புரம், ஒயிட்பீல்டு இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால், மக்களின் பயண நேரம் 40 சதவீதம் குறையும். அத்துடன் 12 ரெயில் நிலையங்களிலும் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி உள்ளிட்டவையும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.புரம், ஒயிட்பீல்டை சுற்றி ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் உள்ளதால், அங்கு பணியாற்றுபவர்களுக்கு இந்த மெட்ரோ ரெயில் சேவை பயன் உள்ளதாக இருக்கும்.

அத்துடன் கே.ஆர்.புரம், ஒயிட்பீல்டு பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கும் தீர்வு கிடைக்கும். முன்னதாக சிக்பள்ளாப்பூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக காடுகோடி மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு பிரதமர் மோடி வந்து இறங்கிய போது, அங்கு திரண்டு இருந்த பா.ஜனதா தொண்டர்கள் பிரதமருக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினார்கள். பிரதமர் மோடியை காண ஏராளமானவர்கள் அங்கு குவிந்ததால், அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்