பாட்னாவில் லாலு பிரசாத் யாதவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

பாட்னாவில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.;

Update:2023-06-23 01:18 IST

பாட்னா,

பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நாளை (23-ந் தேதி) எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாஜகவை எதிர்க்கும் சுமார் 20 கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். எதிர்க்கட்சி தலைவர்களில் தமிழ்நாடு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி ஆகியோர் பாட்னா சென்றுள்ளனர்.

இந்த நிலையில் பாட்னா சென்றுள்ள தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவை சந்தித்தார். மூத்த தலைவரான லாலு பிரசாத் யாதவிடம் ஆசி பெற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார். மேலும் சந்திப்பின் அடையாளமாக கருணாநிதி பற்றிய நூல் ஒன்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், லாலு பிரசாத்துக்கு பரிசளித்தார்.

இந்த சந்திப்பு குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "மூத்த தலைவர் லாலுபிரசாத் யாதவை அவரது இல்லத்தில் சந்தித்தேன். தலைவர் கலைஞர் மீது அவர் கொண்டிருந்த பாசத்தை நாம் அனைவரும் அறிவோம், அதே அரவணைப்புடன் அவர் என்னை வரவேற்று சமூக நீதியின் ஜோதியை உயர்த்த வாழ்த்தினார்.

அவர் நம் அனைவருக்கும் வழிகாட்ட நீண்ட ஆயுளோடு இருக்க வாழ்த்தினேன். நாளை வரலாற்று சிறப்புமிக்க சந்திப்புக்கு தயாராகி வருகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்