சிக்கமகளூருவில் மழை பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை அதிகாரிகளுக்கு கலெக்டர் ரமேஷ் உத்தரவு

சிக்கமகளூரு மாவட்டத்தில் மழை பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-05-25 18:45 GMT

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு மாவட்டத்தில் மழை பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.

ஆலோசனை கூட்டம்

சிக்கமகளூருவில் மழை ெவள்ள பாதிப்புகள் குறித்தும், அதனை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரமேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அனைத்து துறை அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டம் முடிந்த பிறகு கலெக்டர் ரமேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் பருவமழை தொடங்க உள்ளதால் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மழை பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மழை பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. மழை தொடர்பாக எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் மக்கள் எந்த நேரமும் தெரிவிக்கலாம். தகவல் கொடுத்த சில மணி நேரத்தில் மக்களின் பிரச்சினை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மழை பாதிப்புகளை சரி செய்யும் பணியில் அலட்சியமாக செயல்பட்டால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தட்டம்மை நோய்

சிக்கமகளூருவில் தட்டம்மை, ரூபெல்லா நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் தட்டம்மை நோய் இல்லாத மாவட்டமாக சிக்கமகளூருவை மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்