ஓடும் மெட்ரோ ரெயிலில் 'பிராங்க்' வீடியோ எடுத்த வாலிபர்
பெங்களூருவில் ஓடும் மெட்ரோ ரெயிலில் பிராங்க் வீடியோ எடுத்த வாலிபர் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
பெங்களூரு:
பெங்களூருவில் ஓடும் மெட்ரோ ரெயிலில் பிராங்க் வீடியோ எடுத்த வாலிபர் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொடரும் அத்துமீறல்
பெங்களூருவில் பயணிகள் வசதிக்காக மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த ரெயில்களில் சக பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் சிலர் செயல்படுகின்றனர். அதாவது தங்கள் செல்போன்களில் அதிக ஒலியுடன் பாட்டு கேட்பது, உணவு சாப்பிடுவது உள்ளிட்ட செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர்.
கடந்த வாரம் வெளிநாட்டை சேர்ந்த 'யூ-டியூபர்' ஒருவர் ஓசியில் மெட்ரோ ரெயிலில் பயணிப்பது எப்படி என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த வாரம் மெட்ரோ ரெயிலில் கோபி மஞ்சூரியனை ருசித்த நகைக்கடை ஊழியருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இவ்வாறு மெட்ரோ ரெயிலில் தொடர்ந்து பயணிகள் அத்துமீறலில் ஈடுபடுகிறார்கள். இது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மின்சாரம் தாக்கியது போல்...
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் லைக்குகள் பெறுவதற்காக மெட்ரோ நிலையத்தில் பொது அமைதியை பாதிக்கும் வகையில் வீடியோ எடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
அதாவது பெங்களூரு விஜயநகரில் இருந்து மெஜஸ்டிக் நோக்கி மெட்ரோ ரெயில் ஒன்று வந்தது. அந்த ரெயிலில் பயணித்த வாலிபர் ஒருவர், நகரும் படிக்கட்டுகளில் நின்றபடியும், ஓடும் மெட்ரோ ரெயிலிலும் "பிராங்க்" வீடியோ எடுத்தார். அதாவது மின்சாரம் தாக்கி ஷாக் அடிப்பது போல் அவர் நடித்து வீடியோ எடுத்துள்ளார்.
அதிர்ச்சியும்... அச்சுறுத்தலும்...
இதை அறியாத பயணிகள், அந்த வாலிபருக்கு என்ன ஆனதோ ஏது ஆனதோ என சில நிமிடங்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அதன் பிறகு தான் மக்களை அச்சுறுத்தும் வகையில் 'பிராங்க்' வீடியோ எடுத்ததை அறிந்து பயணிகள் அந்த வாலிபரை கடிந்து கொண்டே சென்றனர். அந்த வீடியோவை அவர் "பிராங்க் பிரஜ்ஜி" என்ற டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இதுகுறித்து மெட்ரோ ரெயில்வே நிர்வாகம் சார்பில் கோவிந்தராஜ்நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 'பிராங்க்' வீடியோ எடுத்து பதிவிட்ட நபர் யார் என விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மெட்ரோ ரெயிலில் பிராங்க் வீடியோ எடுத்த நபருக்கு போலீசார் ரூ.500 அபராதம் விதித்துள்ளனர்.