டெல்லி மெட்ரோ ரெயிலில் தரையில் கொட்டிய உணவு... துடைத்து சுத்தம் செய்த மாணவனுக்கு குவியும் பாராட்டுக்கள்
மெட்ரோ ரெயிலில் கீழே கொட்டிய உணவை துடைத்து சுத்தம் செய்த மாணவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
புதுடெல்லி,
டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்த மாணவன் ஒருவன் தனது பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை வெளியே எடுக்கும் போது தவறுதலாக அவனது டிபன் பாக்ஸ் கிழே விழுந்து, அதில் இருந்த உணவு மொத்தமும் தரையில் கொட்டியுள்ளது.
இதனையடுத்து உடனடியாக அந்த மாணவன் சிறிதும் யோசிக்காமல் தனது நோட்டு புத்தகத்தில் இருந்து ஒரு தாளை கிழித்து கீழே கொட்டிய உணவை அள்ளி எடுத்துள்ளான். பின்னர் தனது கைக்குட்டையைக் கொண்டு அந்த இடத்தை நன்றாக துடைத்து முன்பு இருந்தது போல் சுத்தமாக்கி உள்ளான்.
மாணவனின் இந்த செயலை அங்கிருந்த சிலர் புகைப்படமாக எடுத்து, அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் வைரலாக பரவிய நிலையில், சம்பந்தப்பட்ட மாணவனுக்கு தற்போது பாராட்டு மழை பொழிந்து வருகிறது.
அந்த மாணவன் 'தூய்மை இந்தியா' இயக்கத்தை சரியாக புரிந்து கொண்டு செயல்படுத்தியுள்ளான் எனவும், இதை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு அனைவரும் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் கலாச்சார மாற்றம் என்பது இது போன்ற செயல்கள் மூலம் தான் நிகழும் என்றும், இது போன்ற செயல்களை பகிர்வதன் மூலம் பலருக்கு விழிப்புணர்வு ஏற்படும் என்றும் சிலர் கூறியுள்ளனர்.