'திவாலாகும் வங்கியில் பெறப்பட்ட பின்தேதியிட்ட காசோலை' - மகளிர் மசோதா பற்றி காங்கிரஸ் வர்ணனை

திவாலாகும் வங்கியில் பெறப்பட்ட பின்தேதியிட்ட காசோலை என்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா பற்றி காங்கிரஸ் கட்சி வர்ணித்துள்ளது.

Update: 2023-09-20 23:10 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

2010-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மகளிர் மசோதாவையும், 2023-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மகளிர் மசோதாவையும் ஒப்பிட்டு பார்ப்போம். இரண்டு மசோதாக்களிலும், பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இரண்டிலும் எஸ்.சி., எஸ்.டி. பெண்களுக்கு உள்ஒதுக்கீடு உள்ளது.

ஆனால், முக்கியமான வித்தியாசம் என்னவென்றால், 2010-ம் ஆண்டு மகளிர் மசோதா உடனடியாக, எந்த நிபந்தனையும் இன்றி அமல்படுத்துவதாக இருந்தது. ஆனால், 2023-ம் ஆண்டு மசோதாவில், மக்கள்தொகை கணக்கெடுப்பும், தொகுதி மறுவரையறையும் நிபந்தனைகளாக சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், இம்மசோதா சிக்கலான எதிர்காலத்துக்கு தள்ளி போடப்பட்டுள்ளது.

9 ஆண்டுக்கு முன்பே..

2010-ம் ஆண்டு மசோதாவையே கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி நிறைவேற்றி இருக்கலாம். ஏனென்றால், அந்த மசோதா மீது நிலைக்குழு ஆய்வும் முடிந்து விட்டது. ஆனால் அதை செய்யும் எண்ணம் பிரதமருக்கு இல்லை.

தனது கட்சியின் தேர்தல் வெற்றிவாய்ப்பு மங்க தொடங்கும்போதுதான், மகளிர் இடஒதுக்கீடு, பிரதமரின் நினைவுக்கு வந்துள்ளது. அதே சமயத்தில், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு அது அமலுக்கு வராதவகையில் அவர் வாய்ப்பந்தல் போட்டுள்ளார்.

காசோலை

கடந்த 1942-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், இரண்டாம் உலகப்போரை தொடர்ந்து இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க ஆங்கிலேய அரசு முன்வந்தபோது, ''இது, திவாலாகும் வங்கியில் பெறப்பட்ட பின்தேதியிட்ட காசோலை'' என்று மகாத்மா காந்தி சொன்னார்.

மகளிர் மசோதா தொடர்பான பிரதமர் மோடியின் செயல்பாட்டுக்கு இதுதான் பொருத்தமான வர்ணனை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்