திருச்சூரில் இன்று பூரம் திருவிழா 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

திருச்சூரில் இன்று பூரம் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்

Update: 2023-04-30 03:48 GMT

கோப்பு படம்

கேரள மாநிலம் திருச்சூர் நகரில் ஆண்டுதோறும் பூரம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். திருவம்பாடி கோவில், பாருமேகாவு கோவில் சார்பில் நடைபெற்று வருகிறது. அதேபோல் நடப்பாண்டில் கடந்த 24-ந் தேதி பூரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பட்டம் அணிவிக்கப்பட்ட யானைகள் மீது சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு மாதிரி வானவேடிக்கை நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று காலை 7 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து சிவகுமார் என்ற யானைக்கு பட்டம் அணிவிக்கப்பட்டது. பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டு, அந்த வழியாக யானை வெளியே வந்தது. அத்துடன் பூரம் நிகழ்ச்சிகள் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பூரம் திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடக்கிறது. மாலை 4 மணிக்கு யானைகளுக்கு பட்டம் அணிவிக்கப்பட்டு குடை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் 20-க்கும் மேற்பட்ட யானைகள் அணிவகுத்து, ஒரு யானை மீது சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு வானவேடிக்கை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பூரம் திருவிழாவையொட்டி திருச்சூர் நகரில் இன்று காலை 10 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்சுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. திருவிழாவை காண வெளிநாடுகளில் இருந்து அதிகம் பேர் வந்து உள்ளனார். இதனால் திருச்சூரில் தங்கும் விடுதிகள் நிரம்பி வழிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்