கெம்பண்ணாவின் 'கமிஷன்' குற்றச்சாட்டில் அரசியல் உள்நோக்கம்; மந்திரி சுதாகர் குற்றச்சாட்டு
கெம்பண்ணாவின் ‘கமிஷன்' குற்றச்சாட்டில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.;
பெங்களூரு:
சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
அரசியல் உள்நோக்கம்
எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் கெம்பண்ணாவை நேரில் சந்தித்து பேசிவிட்டு அரசு மீது கமிஷன் குற்றச்சாட்டை கூறியுள்ளார். அவர் கூறும் குற்றச்சாட்டில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. ஊழல் நடத்தி மக்களால் நிராகரிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தை தனது அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்த முயற்சி செய்கிறது.
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா நேரில் சந்தித்து தனது ஆலோசனைகளை கூறினார். அதை செயல்படுத்த முதல்-மந்திரி நடவடிக்கை எடுத்துள்ளார். டெண்டரை இறுதி செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய பாக்கியை பட்டுவாடா செய்துள்ளோம்.
துணை போகிறார்
கெம்பண்ணா இதுவரை கடவுள் இருந்தார். ஆனால் அவர் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்து என்ன பேசினார் என்று தெரியவில்லை. அவருக்கு சமூக அக்கறை இருந்தால் அரசுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து லோக்அயுக்தாவில் புகார் அளிக்கலாம். ஆனால் அதை அவர் செய்யவில்லை. இதை வைத்து தேர்தலில் வியூகம் வகுக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது. அதற்கு கெம்பண்ணா துணை போகிறார். காங்கிரசிடம் அவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கெம்பண்ணா லோக்அயுக்தாவுக்கு செல்லாமல் ஊடகங்களிடம் வந்து பேசுவது ஏன்?. அவரை பலிகடா ஆக்க காங்கிரஸ் முற்சி செய்கிறது.
இவ்வாறு சுதாகர் கூறினார்.