தேர்தல் இலவசங்கள் தடை செய்யப்படுமா..? சுப்ரீம் கோர்ட்டில் இன்று முக்கிய விசாரணை

தேர்தல்களில் இலவசம் கொடுப்பதாக வாக்குறுதி அளிப்பதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

Update: 2024-03-21 04:43 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் அஸ்வினி உபாத்யாயா என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சமீபகாலமாக தேர்தலை மனதில் கொண்டு வாக்காளர்களை கவர அரசு பணத்தில் இருந்து இலவசம் அளிப்பதாக அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிக்கின்றன. இவை ஜனநாயக கோட்பாடுகளுக்கு மாபெரும் அச்சுறுத்தல் மட்டுமின்றி, அரசியல் சட்டத்துக்கு எதிரானது.

இப்படி வாக்குறுதி அளிப்பது அரசு பணத்தில் லஞ்சம் தருவது போன்றது. ஜனநாயக கொள்கைகளை பாதுகாக்க இந்த முறையை தவிர்க்க வேண்டும்.

அறிவுக்கு புறம்பான இலவசங்களை வாக்குறுதியாக அளிப்பது, சமமாக போட்டியிடும் வாய்ப்பை கெடுப்பதுடன், தேர்தல் பணியின் புனிதத்தன்மையை சீர்குலைத்து விடும் என்று கோர்ட்டு அறிவிக்க வேண்டும்.

முறையற்ற ஆதாயம் பெறுவதற்காக கவர்ச்சிகரமான நடவடிக்கைகளை அறிவிப்பதற்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும்.

அரசு பணத்தில் இலவசங்களை அறிவிக்கக்கூடாது என்ற புதிய நிபந்தனையை தேர்தல் சின்ன ஒதுக்கீட்டு விதிகளில் சேர்க்க வேண்டும். அதை மீறி இலவசம் அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் தேர்தல் சின்னங்களை முடக்கவும், அவற்றின் பதிவை ரத்து செய்யவும் தேர்தல் கமிஷன் தனது அதிகாரத்தை பயன்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு, மனுதாரரின் வக்கீல் விஜய் ஹன்சாரியா நேற்று நேரில் ஆஜராகி முறையிட்டார்.

''நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு மனுவை விசாரிப்பது அவசியம்'' என்று அவர் கூறினார்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ''இது முக்கியமானது. நாளை (21-03-2024) விசாரிப்போம்'' என்று உறுதி அளித்தனர்.

இதன்படி தேர்தல்களில் இலவசங்கள் அறிவிப்பதற்கு எதிரான பொதுநல மனு, சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்