பெங்களூரு சிறையில் போலீசார் அதிரடி சோதனை

கைதிகளுக்கு பயங்கரவாத பயிற்சி அளித்த விவகாரம் தொடர்பாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் போலீசார் ேசாதனை நடத்தினர். இதில் 4 செல்போன்கள் சிக்கின.

Update: 2023-07-24 22:32 GMT

பெங்களூரு:

கைதிகளுக்கு பயங்கரவாத பயிற்சி அளித்த விவகாரம் தொடர்பாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் போலீசார் ேசாதனை நடத்தினர். இதில் 4 செல்போன்கள் சிக்கின.

பயங்கரவாதிகள் கைது

பெங்களூருவில் நாசவேலையில் ஈடுபட தயாராக இருந்த 5 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கொலை வழக்கு ஒன்றில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவர்களுக்கு பயங்கரவாதி நசீர் மற்றும் ஜுனைத் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டதும், அவர்களிடம் பயிற்சி பெற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரும் வெளியே வந்த பிறகு கூட்டாக சேர்ந்து பெங்களூருவில் குண்டுவெடிப்பு நிகழ்த்த சதித்திட்டம் தீட்டியதும் தெரிந்தது.

தற்போது ஜுனைத் ஜாமீனில் வெளியே வந்து வெளிநாட்டிற்கு தப்பி ஓடி தலைமறைவாக உள்ளார். அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே சிறையில் உள்ள பயங்கரவாதி நசீரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சிறையில் வைத்து தான் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாக விசாரணையில் தெரிந்தது. மேலும் அவர், சிறை கைதிகளுக்கு பயங்கரவாத பயிற்சி அளித்தது விசாரணையில் தெரியவந்தது.

4 செல்போன்கள் சிக்கின

இந்த நிலையில் போலீஸ் அதிகாரிகள் பரப்பன அக்ரஹாரா சிறையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிறையில் இருந்த கண்காணிப்பு கோபுரம் அருகே கழிவறை ஒன்றில் 4 செல்போன்கள் கிடந்தன. அவற்றை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக பரப்பன அக்ரஹாரா போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் அவ்வப்போது செல்போன்கள், போதைப்பொருட்கள் புழக்கம் கண்டறியப்பட்டு தடுக்கப்படுகிறது.

எனினும் அவற்றை கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து தான் வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. மாலினி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது முறையான பதில் கிடைக்கவில்லை. இதற்கு மத்தியில் தற்போது செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்