பெங்களூருவில் 6,500 போலீசார் குவிப்பு

பிரதமர் மோடி வருகையையொட்டி பெங்களூருவில் 6,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சிட்டி ரெயில் நிலையத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2022-11-10 21:56 GMT

பெங்களூரு:

பிரதமர் மோடி வருகையையொட்டி பெங்களூருவில் 6,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சிட்டி ரெயில் நிலையத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

6,500 போலீசார் பாதுகாப்பு

பிரதமர் நரேந்திர மோடி இன்று(வெள்ளிக்கிழமை) பெங்களூருவுக்கு வருகை தர உள்ளார். பெங்களூரு விமான நிலையத்தில் கெம்பேகவுடா சிலை, 2-வது விமான முனையத்தை அவர் திறந்து வைக்கிறார். அத்துடன் பெங்களூரு சிட்டி ரெயில் இருந்து வந்தே பாரத் விரைவு ரெயில் சேவையையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். பெங்களூருவுக்கு பிரதமர் வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு போலீஸ் கமிஷனர், கூடுதல் போலீஸ் கமிஷனர்கள், துணை போலீஸ் கமிஷனர்கள், உதவி போலீஸ் கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 6,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து விதானசவுதா, சிட்டி ரெயில் நிலையத்திற்கு பிரதமர் மோடி வரும் 14 சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டு, வழி எங்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

ரெயில் நிலையத்தை சுற்றி...

சிட்டி ரெயில் நிலையத்திற்கு பிரதமர் வருவதையொட்டி ரெயில்வே போலீசார், கர்நாடக போலீசார் உள்பட 1,200 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சிட்டி ரெயில் நிலையத்தின் 7 மற்றும் 8-வது நடைமேடையில் இருந்து வந்தே பாரத் ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளதால், அந்த நடைமேடைகளில் இருந்து செல்லும் ரெயில்கள் யஷ்வந்தபுரம், பையப்பனஹள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக ரெயில் நிைலயத்தை சுற்றி நேற்று காலையில் இருந்தே போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விதானசவுதாவுக்கு பிரதமர் மோடி செல்வதையொட்டி, அதை சுற்றியுள்ள சாலைகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள். பிரதமர் நரேந்திர மோடி செல்லும் சாலைகள் புதிதாக போடப்பட்டு இருப்பதுடன், சாலை தடுப்பு சுவர்களில் வர்ணம் பூசப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெங்களூரு நகரமே விழாக்கோலம் பூண்டு இருப்பதுபோல் காட்சி அளிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்