மணிப்பூரில் போலீஸ் அதிகாரி சுட்டு கொலை; மீட்க சென்ற போலீசார் மீதும் திடீர் தாக்குதல்
இம்பால் நகரில் இருந்து 115 கி.மீ. தொலைவில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஹெலிபேட் கட்டுமான பணியை மேற்பார்வையிடும் பணியில் ஈடுபட்டபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.;
மோரே,
மணிப்பூரில் கடந்த மே 3-ந்தேதி மெய்தி சமூகம் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே வன்முறை ஏற்பட்டது. இது பல இடங்களில் பரவி கலவரம் வெடித்தது. வீடுகள், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து, கலவரம் பரவி விடாமல் தடுக்கும் நோக்கில் போலீசார் பல்வேறு நகரங்களில் குவிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக மோரே நகரிலும் போலீசார் படை அதிக அளவில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மணிப்பூரின் தெங்நவ்பால் மாவட்டத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இன்று காலை மூத்த காவல் அதிகாரி சிங்தம் ஆனந்த் என்பவர் சுட்டு கொல்லப்பட்டார்.
அவர் இம்பால் நகரில் இருந்து 115 கி.மீ. தொலைவில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஹெலிபேட் கட்டுமான பணியை மேற்பார்வையிடும் பணியில் ஈடுபட்டபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதன் எதிரொலியாக போலீஸ் கமாண்டோ படை சம்பவ பகுதிக்கு சென்றது. எனினும், அவர்கள் செல்லும் வழியில் ஊடுருவல் கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டனர். இதில், பலர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து, அசாம் ரைபிள் படையினர் அந்த பகுதிக்கு பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் தாக்குதலில் சிக்கிய போலீஸ் கமாண்டோ படையினரை மீட்டனர். அவர்களில் பலர் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதுபற்றி குகி சமூக குழுவினர் வெளியிட்ட அறிக்கையில், மோரே நகரில் மக்களை துன்புறுத்துவதற்காக மணிப்பூர் அரசு படைகளை அனுப்பி வருகிறது. படைகளின் இந்த தவறான பயன்பாட்டால், குகி கிராம தன்னார்வலர்கள் இணைந்து பதிலடியாக துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர் என தெரிவித்து உள்ளது.
போலீசார் திரும்ப பெறப்பட வேண்டும் என மத்திய அரசுக்கும் வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது. எனினும், நிலைமையை பற்றி முதலில் ஆய்வு செய்த பின்னரே, ஒரு முடிவுக்கு வரமுடியும். எந்த குழுவும் எதுவும் கூற முடியும். அதனால், அது உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என காவல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.