பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் கர்நாடக போக்குவரத்து போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. நேரில் ஆய்வு
பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் தொடர் விபத்துகளால், மாநில போக்குவரத்து போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. அலோக் குமார் நேரில் ஆய்வு செய்தார். அப்போது விதிமீறலில் ஈடுபட்டதால் வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றார்.
பெங்களூரு:
பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் தொடர் விபத்துகளால், மாநில போக்குவரத்து போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. அலோக் குமார் நேரில் ஆய்வு செய்தார். அப்போது விதிமீறலில் ஈடுபட்டதால் வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றார்.
விரைவுச்சாலை
பெங்களூரு-மைசூரு இடையே மத்திய சாலை போக்குவரத்து துறை சார்பில் விரைவுச்சாலை அமைக்கப்பட்டது. அந்த சாலையை பிரதமர் மோடி கடந்த மார்ச் மாதம் 12-ந் தேதி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இருப்பினும் அதற்கு முன்னதாகவே அந்த சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தது. இந்த விரைவுச்சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது முதல் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் விபத்தில் தங்களது உயிரை பறிகொடுத்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். கடந்த மாதங்களாக இந்த சாலையில் விபத்துகள் பன்மடங்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட 2 கார்கள் மோதி 3 பேர் பலியானார்கள்.
அதிவேகமாக கார்களை ஓட்டுவது மற்றும் மதுபோதையில் வாகனம் இயக்குவதே அதிக விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் வேகத்தடை இல்லாதது, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடாதது, மேலும் அறிவிப்பு பலகைகள் இல்லாததும் விபத்துக்கு காரணம் என பலதரப்பினரால் சொல்லப்படுகிறது.
போலீசார் கண்காணிப்பு பணி
இந்த நிலையில் தொடர் விபத்துக்கள் எதிரொலியாக, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை மாநில போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. அலோக் குமார், பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் விபத்துகள் ஏற்படுவதற்கான காரணங்கள், பகுதிகள் குறித்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் விசாரித்து தெரிந்து கொண்டார். மேலும் விபத்துகள் நடைபெற்ற பகுதிகளில் ஆய்வு செய்தார். இதையடுத்து அலோக் குமார் கூறுகையில், 'பெங்களூரு விரைவுச்சாலையில் குறிப்பிட்ட இடைவெளியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். அப்போது தான் வாகன ஓட்டிகள் குறைந்த வேகத்தில் செல்வார்கள்.
ரோந்து பணிக்கு கூடுதல் வாகனங்கள் ஒதுக்கப்பட வேண்டும். விபத்துகள் ஏற்படுவதை தடுப்பதற்கு விரைவுச்சாலை எல்லைக்கு உட்பட்ட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 5 மாதங்களில் மட்டும் சுமார் 58 பேர் உயிரிழந்துள்ளனர். விரைவுச்சாலையை புறப்பகுதிகளுடன் இணைக்கும் சாலைகளில் சிக்கல்கள் உள்ளன. விபத்தை கட்டுப்படுத்த, வேகத்தை கணக்கீடு செய்யும் கருவிகள் பொருத்தப்படம்.
அதிகாரிகள் மீது நடவடிக்கை
விரைவுச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், விதிமீறல்களில் ஈடுபட்டால் அவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். குறிப்பாக மது குடித்துவிட்டு, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சாலையில் விபத்தை 25 சதவீதம் குறைக்க திட்டமிட்டுள்ளோம். இதுதொடர்பாக நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவற்றை கடைப்பிடிக்க தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும். நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட பகுதிகளில் மேல்மட்ட நடைபாதைகள் அமைப்பதற்கும், விரைவுச்சாலையை ஆய்வு செய்வதற்கும் நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அழுத்தம் கொடுப்போம். நான் தாவணகெரே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்தபோது நெடுஞ்சாலையில் விபத்துகள் ஏற்படுவதை 40 சதவீதமாக குறைத்தேன்' என்றார்.