கத்ரி கோவில் மீது தாக்குதல் நடத்த சதி: புதிய பயங்கரவாத அமைப்பு மீது போலீசில் புகார்
கத்ரி கோவில் மீது தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டப்பட்டது குறித்து புதிய பயங்கரவாத அமைப்பு மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மங்களூரு:
கத்ரி கோவில்
மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி ஷாரிக்கின் செல்போனை சோதனை செய்தபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது அவர், மங்களூருவில் கத்ரி மஞ்சுநாதர் கோவில், குத்ரோலி கோகணர்நாத கோவில், மங்களாதேவி கோவில், ஆர்.எஸ்.எஸ். சார்பில் நடந்த குழந்தைகள் நிகழ்ச்சி, ரெயில் நிலையம், பஸ் நிலையம் ஆகிய 6 இடங்களில் பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளார்.
இந்த சம்பவத்துக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் கவுன்சில் (ஐ.ஆர்.சி.) என்ற புதிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றதுடன், கத்ரி கோவிலில் நாசவேலையை அரங்கேற்ற சதி திட்டம் தீட்டி, ஆட்டோவில் குக்கர் குண்டை கொண்டு சென்றபோது தான், அந்த குண்டு வெடித்ததாகவும் தெரிவித்துள்ளது.
பக்தர்கள் அதிர்ச்சி
இந்த நிலையில் ஐ.ஆர்.சி. அமைப்பு குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த பெயரில் அமைப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் ஐ.ஆர்.சி. அமைப்பு, பிரபல பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.சின் கிளையாக இருக்கலாம் கூறப்படுகிறது. இதுகுறித்தும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கத்ரி கோவிலில் லட்சதீப உற்சவம் நடந்து வரும் நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு சென்று வருகிறார்கள். இந்த நிலையில், கத்ரி கோவிலில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டப்பட்ட சம்பவம் பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
இந்த நிலையில் கத்ரி கோவில் செயல் அலுவலர் ஜெயம்மா, கத்ரி போலீசில் புதிய பயங்கரவாத அமைப்பு மீது புகார் கொடுத்துள்ளார். அதில், 'புதிய பயங்கரவாத அமைப்பின் அறிக்கையை தீவிரமாக எடுத்து குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்று கூறி உள்ளார்.
இதையடுத்து கத்ரி மஞ்சுநாதர் கோவிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.