எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு: பெங்களூரு காவல் ஆணையருக்கு மகளிர் ஆணையம் கடிதம்

புகார் அளித்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு அமைப்புகள் குற்றச்சாட்டி வருகின்றனர்.;

Update:2024-09-02 13:25 IST

File image

பெங்களூரு,

பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மார்ச் மாதம் பெங்களூரு சதாசிவநகர் போலீஸ் நிலையத்தில் ஒரு பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தார். அதில், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவை தனது 17 வயது மகளுடன் நேரில் சந்தித்து உதவி கேட்டபோது, தனது மகளை அவர் தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இது தொடர்பாக எடியூரப்பா மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் எடியூரப்பாவுக்கு எதிராக பெங்களூரு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. அவரை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் எடியூரப்பா மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, எடியூரப்பாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதனிடையே எடியூரப்பா மீது புகார் அளித்த 54 வயது பெண் மூச்சுதிணறல் காரணமாக கடந்த மே மாதம் மருத்துவமனையில் உயிரிழந்தார். அந்த பெண்ணுக்கு நுரையீரல் புற்றுநோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து எடியூரப்பா மீதான போக்சோ வழக்கில் சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் கடந்த ஜூன் 27ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

உடல்நலக்குறைவால் இறந்ததாக கூறப்பட்டாலும், புகார் அளித்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு அமைப்புகள் குற்றச்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், புகார் அளித்த பெண்ணின் மரணம் குறித்து விரிவான அறிக்கை அளிக்க பெங்களூரு காவல் ஆணையருக்கு மாநில மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்