நுபுர் ஷர்மாவின் கருத்து ஆட்சேபனைக்குரியதா இல்லையா என பிரதமரின் நண்பரிடம் கேட்பேன் - ஓவைசி

தனது தாயார் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது நண்பர் அப்பாஸ் குறித்து பேசி இருந்தார்.

Update: 2022-06-20 09:02 GMT

Image Courtesy : AFP 

புதுடெல்லி,

பா.ஜ.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா டிவி விவாதம் ஒன்றில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பேசியதாக மராட்டிய காவல்துறை வழக்கு பதிவு செய்தது. அதேபோல் நவீன் ஜிந்தால் தனது டுவிட்டர் பதிவில் நபிகள் குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்டிருந்தார். இதற்கு சர்வதேச அளவில் சர்ச்சை கிளம்பியது.

இதையடுத்து முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிந்தால் ஆகிய இருவரை நீக்கம் செய்து பாஜக அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இது குறித்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி ஏற்கனவே கூறுகையில் நுபுர் சர்மாவை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.இந்த நிலையில் அவர் மீண்டும் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார்.

தனது தாயார் ஹீராபென் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் பிரதமர் மோடி தனது நண்பர் அப்பாஸ் குறித்து நினைவு கூர்ந்து பேசி இருந்தார். "எனது தந்தையின் நெருங்கிய நண்பர் ஒருவர் பக்கத்து கிராமத்தில் தங்கியிருந்தார். அவரது அகால மரணத்திற்குப் பிறகு, எனது தந்தை தனது நண்பரின் மகன் அப்பாஸை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தார். எங்களுடன் தங்கி அப்பாஸ் படிப்பை முடித்தார்." என பிரதமர் தெரிவித்து இருந்தார்.

பிரதமரின் நண்பர் அப்பாஸை குறிப்பிட்டு ஓவைசி பேசியதாவது :

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனது நண்பரை பிரதமர் நினைவு கூர்ந்தார். உங்களுக்கு இந்த நண்பர் இருப்பது எங்களுக்குத் தெரியாது. நாங்கள் பிரதமரிடம் வேண்டுகோள் விடுக்கிறோம், தயவு செய்து திரு அப்பாஸை அழைக்கவும். அவர் அங்கு இருந்தால் எங்கள் உரைகளைக் கேட்கச் செய்து, நாங்கள் பொய் சொல்கிறோமா என்று அவரிடம் கேட்கவும்.

நீங்கள் அப்பாஸின் முகவரியைப் பகிர்ந்து கொண்டால், நான் அப்பாஸிடம் செல்வேன். நபிகள் நாயகத்தைப் பற்றி நுபுர் ஷர்மா கூறியது ஆட்சேபனைக்குரியதா இல்லையா என்று நான் அவரிடம் கேட்பேன். நுபுர் சர்மா பேசியது தவறு தான் என அவர் ஒப்பு கொள்வார்.

இவ்வாறு ஓவைசி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்