தாயார் ஹீராபெனின் இறுதி சடங்கு 6 மணி நேரத்திற்குள் முடிவடைய என்ன காரணம்...? வலியை காட்டிக்கொள்ளாமல் நின்ற பிரதமர் மோடி...!
பிரதமர் மோடி நினைத்து இருந்தால் தனது தாயிற்கு அரசு மரியாதையுடன் தகனத்தை நடத்தி இருக்கலாம் ஆனால் சாதாரண சாமானிய மனிதராகவே நடந்து கொண்டார்.
அகமதாபாத்,
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த புதன் கிழமை அகமதாபாத்தில் உள்ள யு.என். மேத்தா இதயவியல் மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வந்தார். இந்த தகவல் அறிந்த உடனேயே டெல்லியில் இருந்து அகமதாபாத் விரைந்து சென்ற பிரதமர் மோடி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயாரைச் சந்தித்து நலம் விசாரித்தார். மருத்துவமனையிலேயே ஒரு மணி நேரத்திற்கு மேல் இருந்த பிரதமர் மோடி, மருத்துவர்களிடம் தனது தாயாருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் டெல்லி சென்று வழக்கமான அலுவலக பணிகளை மேற்கொண்டார்.
இந்த நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.30 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 100. ஹீரா பென்னின் மறைவை , மேத்தா இதயவில் மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இதையடுத்து அவரது உடல் காந்தி நகருக்கு புறநகர்ப் பகுதியில் ரெய்சான் கிராமத்தில் இருக்கும் பிரதமர் மோடியின் சகோதரர் பங்கஜ் மோடியின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவர் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
தகவல் அறிந்த உடனேயே டெல்லியில் இருந்து குஜராத்திற்கு தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, அகமதாபாத்திற்கு வந்தார். பின்னர் காரில் காந்திநகரில் தனது தாயார் உடல் வைக்கப்பட்டிருந்த சகோதரரின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இறுதிச் சடங்கில் பங்கேற்ற பிரதமர் மோடி தனது தாயாரின் பூத உடலை தோளில் சுமந்து சென்றார். இது பார்ப்பவரையும் கண்ணீரை வரவழைத்தது. சாதாரண நபர் போல தாயார் அருகிலேயே பிரதமர் மோடி இருந்தார். மயானம் வரை தனது தாயை பிரிய மனமில்லாமல் கனத்த இதயத்துடன் மயானத்தில் அவரது சிதைக்கு தீ மூட்டினார்.
உடன் குஜராத் முதல்-மந்திரி புபேந்திர படேல், முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானி உள்ளிட்டோர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் எந்தவொரு அரசியல் கட்சியினரையும் பார்க்கமுடியவில்லை. மேலும் பிரதமர் மோடியின் நெருங்கிய மத்திய மந்திரிகளான அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கூட எந்தவொரு முக்கிய நபருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
தாயை இழந்தாலும் அதனை வெளியே காட்டிக்கொள்ளாமல் சற்று கனத்த முகத்துடன் காணப்பட்டார்.
பிரதமர் மோடியின் தாயாரின் இறுதிச்சடங்கில் பாஜக கட்சிக்காரர்களோ, மந்திரிகளோ யாரும் வர வேண்டாம் எனவும் அவரவர் பணியை பாருங்கள் என பிரதமர் மோடி வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. அதனால் யாரும் மலர் வளையத்தை சுமந்து கொண்டு வருவதை காண முடியவில்லை.
பிரதமர் மோடி நினைத்து இருந்தால் தனது தாயிற்கு அரசு மரியாதையுடன் தகனத்தை நடத்தி இருக்கலாம் ஆனால் சாதாரண சாமானிய மனிதராகவே நடந்து கொண்டார்.
பிரதமர் மோடி இவ்வளவு சீக்கரமாக இறுது சடங்கை முடித்தற்கு அவருடைய எளிமை மற்றும் தேவையற்ற நேர விரயத்தை தவித்தல் என்பதே நோக்கமாக இருந்து இருக்கிறது என்பது அவரது அரசியல் நடத்தை கூறுகிறது.
6 மணி நேரத்திற்குள் இறுதிச்சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து விட்டன. ஹிரா பென்னின் இறுதிச் சடங்குகள், காலை 10 மணிக்குள் நிறைவடைந்து விட்டது. பிரதமரே நேரில் பங்கேற்று அஞ்சலி செலுத்திய போதிலும், பரபரப்புகள் ஏதுமின்றி, அமைதியாக, மிக எளிமையாக இறுதிச் சடங்குகள் நடந்து முடிந்தது. ஒரு அன்பு மகனாக தனது கடமையை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றி உள்ளார்.
இறுது சடங்கு முடிந்ததும் மக்கள் நல திட்டங்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக திட்டமிட்டப்படி பிரதமர் மோடி மேற்குவங்காளம் வந்தே பாரத் ரெயில் சேவையை வீடியோ கான்பரன்ஸ் மூலம் காந்திநகரில் இருந்தபடி காலை 11.30 மணிக்கு துவக்கி வைத்தார்.
இதன் மூலம் தன்னலமற்ற தலைவராகவும், நாட்டு மக்களின் நலனில் அதிக கவனம் செலுத்தும் தலைவராகவும் பிரதமர் மோடி திகழ்வதை இந்நிகழ்ச்சிகள் வெளிக்காட்டுவதாக பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மோடி குடும்பத்தினர் தரப்பில்,
இந்த கடினமான காலங்களில் பிரதமர் மோடியின் தாயார் நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. அனைவரும் அவரை தங்களது மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். திட்டமிட்டபடி தங்களது பணியை தொடருங்கள். அதுவே, ஹீராபென்னுக்கு செய்யும் மரியாதையாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
நேர்மையாக வாழ வேண்டும் என கடந்த பிறந்தநாளில் தாயார் மோடியிடம் கூறியதாக அவர் நினைவுகூர்ந்துள்ளார். ஆம் தாயார் கூறியபடியே வாழ்ந்து காட்டுகிறார் பிரதமர் மோடி என்றால் மிகையல்ல.