சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற தடகள வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி உரையாடல்

சீனாவில் நடந்த உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற தடகள வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி உரையாடினார்.

Update: 2023-08-27 07:45 GMT

புதுடெல்லி,

பிரதமர் மோடி ஒவ்வொரு மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று வானொலி மூலம் மன் கி பாத் என்ற நிகழ்ச்சி வழியே நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இதில், பல்வேறு ஆக்கப்பூர்வ விசயங்கள் பற்றி பேசி வருவதுடன், சாதனை படைத்த நபர்களுடன் உரையாடவும் செய்கிறார்.

கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இந்த நிகழ்ச்சியானது, நடப்பு ஆண்டில் கடந்த ஏப்ரல் 30-ந்தேதி உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் கண்டும், கேட்டும் மகிழும் வகையில் 100வது நிகழ்ச்சியாக அமைந்தது.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று காலை 11 மணியளவில் 104-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அதில் அவர் பேசும்போது, புதிய இந்தியா, சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றி, அதில் பெண் விஞ்ஞானிகளின் பெரும் பங்கு, பெண் சக்தி, அவர்கள் தலைமையிலான வளர்ச்சி ஆகியவற்றை பற்றி குறிப்பிட்டார்.

டெல்லியில் வரும் செப்டம்பரில் ஜி-20 தலைவர்களுக்கான உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், அப்போது இந்தியாவின் ஆற்றல் தெரிய வரும் என்றும் அவர் பெருமைபட பேசினார்.

நமது ஜி-20 தலைமைத்துவம் மக்களுக்கான தலைமைத்துவம் ஆகும். அதில், மக்கள் அதிக அளவில் கலந்து கொள்வது முன்னணியில் இருக்கும் என்று பேசியுள்ளார்.

இதன்பின்னர் பிரதமர் மோடி, நான் ஒரு போட்டி தொடரை பற்றி பேச இருக்கிறேன். விளையாட்டு பிரிவில் நம்முடைய இளைஞர்கள் தொடர்ச்சியாக புதிய வெற்றிகளை படைத்து வருகிறார்கள்.

சீனாவில் நடந்த உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளில் இந்தியா, சிறந்த முறையில் திறமையை வெளிப்படுத்தி இருந்தது என்று அவர் கூறினார்.

இந்த போட்டிகளில் பதக்கங்களை வென்றிருந்த தடகள வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு வாழ்த்துகளை தெரிவித்து, அவர்களுடன் உரையாடினார்.

அவர் பேசும்போது, சில இளம் விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் என்னுடன் தொலைபேசியில் தொடர்பில் உள்ளனர். முதலில், அவர்களை பற்றி நான் உங்களிடம் கூறுகிறேன். உத்தர பிரதேச மாநிலத்தில் வசிப்பவரான பிரகதி என்பவர் வில்வித்தை போட்டியில் ஒரு பதக்கம் வென்றார்.

அசாமை சேர்ந்த அமலன் என்பவர் தடகள போட்டியில் பதக்கம் வென்றுள்ளார். நடை பந்தய போட்டியில் உத்தர பிரதேச மாநிலத்தின் பிரியங்கா என்பவரும், துப்பாக்கி சுடுதலில் மராட்டியத்தின் அபித்னியா என்பவரும் பதக்கம் வென்றுள்ளனர்.

எனதருமை இளம் வீரர், வீராங்கனைகளே, வணக்கம் என்று கூறினார். பதிலுக்கு அவர்களும் வணக்கம் தெரிவித்தனர்.

தொடர்ந்து பிரதமர் மோடி, உங்களுடன் பேசுவதில் நான் மிக நன்றாக உணர்கிறேன். முதலில், நாட்டுக்கு பெருமையை கொண்டு வந்து சேர்ப்பதற்காக இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவை சேர்ந்த உங்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள்.

உலக பல்கலைக்கழக போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தி, நாட்டின் ஒவ்வொரு மனிதரையும் நீங்கள் பெருமையடைய செய்திருக்கிறீர்கள். அதனால், உங்கள் அனைவருக்கும் முதலில் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறி அவர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்