அதானி குறித்து பேசும் போது மோடியின் கைகள் நடுங்குகின்றன - ராகுல் காந்தி

நாடாளுமன்றத்தில் தான் அதானி குறித்து பேசும் போதெல்லாம் பிரதமர் மோடியின் கைகள் நடுங்குவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.

Update: 2023-02-13 17:50 GMT

Image Courtacy: ANI

வயநாடு,

காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தனது சொந்த தொகுதியான கேரள மாநிலம் வயநாட்டுக்கு இன்று வருகை தந்தார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய உரையின் சில பகுதிகள் நீக்கப்பட்டன. நான் யாரையும் அவமதிக்கவில்லை. ஆனாலும், நான் கூறியதற்கு ஆதாரம் காட்டுமாறு பாஜகவினர் வலியுறுத்தினார்கள். இதையடுத்து, எனது உரையில் நீக்கப்பட்ட பகுதிகளுக்கும் சேர்த்து அவர்கள் எழுப்பிய ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளித்து மக்களவை சபாநாயகருக்கு ஆதாரத்துடன் கடிதம் எழுதியுள்ளேன்.

அதானிக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையேயான தொடர்பு குறித்து இந்திய மக்களுக்கு கட்டாயம் தெரிய வேண்டும். அதனால்தான் இந்த விஷயத்தை நான் நாடாளுமன்றத்தில் பேசி வருகிறேன். மோடியுடன் சேர்ந்து அதானி வெளிநாடுகளுக்கு பயணம் செய்த போதெல்லாம், அதானிக்கு அந்நாடுகளின் ஒப்பந்தங்கள் கிடைத்திருக்கின்றன. அது எப்படி?

இன்றைக்கு 30 சதவீத விமானப் போக்குவரத்து அதானியின் வசம் இருக்கின்றன. மோடியுடன் நட்புறவில் இருப்பதால் மட்டுமே அதானிக்கு இவை கிடைத்திருக்கின்றன. முன்பு, விமான நிலையங்களை வாங்கும் நிறுவனங்களுக்கு பல விதிமுறைகள் இருந்தன. விமான நிலையங்களை நடத்திய அனுபவம் இல்லாதவர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க முடியாது. ஆனால், தற்போது அதானிக்காகவே இதுபோன்ற விதிகள் மாற்றப்பட்டிருக்கின்றன. இன்று மிகப்பெரிய விமானநிலையமான மும்பை விமான நிலையமே அதானியின் வசம்தான் இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் நான் அதானி விவகாரத்தை பற்றி பேசும் போது, எனது முகத்தையும், மோடியின் முகத்தையும் நீங்கள் பாருங்கள். மோடி எத்தனை முறை தண்ணீர் குடிக்கிறார் என்று பாருங்கள். அப்படி அவர் தண்ணீர் குடிக்கும் போது அவர் கைகள் நடுங்குவதை கவனியுங்கள். என்றைக்கு இருந்தாலும் ஒருநாள் உண்மை வெளிவந்தே தீரும். அன்று நான் மோடியை குற்றம்சாட்டி பேசினாலும், எனது பேச்சு மிக கண்ணியமாதாக இருந்தது. ஆனால், எனது பேச்சை அவர்கள் கத்தரித்துவிட்டார்கள். அதே சமயத்தில், என்னை நேரடியாக தாக்கி மோடி பேசிய பேச்சை அப்படியே அவர்கள் ஒளிபரப்பினார்கள்.

பிரதமர் என்பதால் தான் மிகவும் சக்திவாய்ந்தவர் என்றும், மக்கள் தன்னைப் பார்த்து பயப்பட வேண்டும் என்றும் நரேந்திர மோடி நினைக்கிறார். அவர் உண்மையை உணரவில்லை. அதுதான் அச்சத்தை ஏற்படுத்துகிறது. அவர் பிரதராக இருப்பது ஒரு விஷயமே இல்லை. ஏனெனில், உண்மையை ஒருநாள் அவர் எதிர்கொள்ளத்தான் வேண்டும். நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் கவனிப்பதும் புரிந்து கொள்வதும் மிகவும் முக்கியம். அப்போதுதான், பிரதமருக்கும் அதானிக்கும் இடையே இருக்கும் தொடர்பை புரிந்துகொள்ள முடியும்" என்று அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்