இந்தியாவில் டெஸ்லா கார்கள் விரைவில் அறிமுகம் - எலான் மஸ்க் பேட்டி
இந்தியாவில் டெஸ்லா கார்கள் விரைவில் அறிமுகமாகும் என்று பிரதமர் மோடியை சந்தித்த பிறகு எலான் மஸ்க் கூறியுள்ளார்.
மூன்று நாள் அரசு முறை பயணமாக நேற்று அமெரிக்கா புறப்பட்டு சென்ற பிரதமர் மோடி, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் டுவிட்டர் உரிமையாளருமான எலான் மஸ்க்கை இன்று சந்தித்தார். பிரதமர் மோடியை சந்தித்த அவர் செய்தியாளர்களிடம் நான் மோடியின் ரசிகன் என்று கூறினார்.
பிறகு, பிரதமருடன் இது ஒரு அற்புதமான சந்திப்பு, எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் கலிபோர்னியாவில் உள்ள எங்கள் டெஸ்லா தொழிற்சாலைக்கு வருகை தந்தார். எனவே, நாங்கள் ஒருவரையொருவர் சிறிது அறிந்திருக்கிறோம் என்று எலான் மஸ்க் கூறினார்.
மேலும், இந்திய சந்தையில் டெஸ்லா கார் எப்போது அறிமுகம்..? என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த எலான் மஸ்க், அடுத்த ஆண்டு தான் இந்தியா வருவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், டெஸ்லா இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் என்று நம்புவதாகவும் கூறினார்.
அமெரிக்காவில் பிரதமர் மோடி தங்கியுள்ள ஓட்டலின் சிறப்பம்சங்கள்
அமெரிக்காவில் பிரதமர் மோடி தங்கியிருக்கும் லோட்டே நியூயார்க் அரண்மனை ஹோட்டல் நட்சத்திர ஓட்டலின் சிறப்புகள் குறித்து பார்க்கலாம்.
இது நியூயார்க்கின் மிகவும் பிரபலமான மற்றும் முக்கியமான ஓட்டலாகும். இது இரண்டு தங்குமிட அனுபவங்களை பயனாளர்களுக்கு வழங்குகிறது . ஒன்று அரண்மனை வடிவிலான வசதி மற்றொன்று டவர் பாணியிலான கட்டமைப்புடன் கூடிய வசதி.
1880-களில் அப்போதைய வடக்கு பசிபிக் ரெயில்வேயின் தலைவரான ஹென்றி வில்லார்ட் என்பவரால் இந்த ஓட்டல் கட்டப்பட்டது. 1874 இல், ஹென்றி வில்லார்ட், டெவலப்பர் ஹாரி ஹெல்ம்ஸ்லி என்பவரிடம் கொடுத்து, வில்லார்ட் ஹவுஸ் மாடலில் 55-அடுக்கு ஓட்டலை கட்ட முன்மொழிந்தார்.
அதன்படி ஓட்டல் கட்டுமான பணிகள் சுமார் 6 ஆண்டுகளாக நடந்து முடிந்து 1881 இல், இது ஹெல்ம்ஸ்லி அரண்மனையாக திறக்கப்பட்டது.
ஹென்றி வில்லார்ட்டால் கட்டப்பட்ட இந்த நட்சத்திர ஓட்டலானது 1882 ஆம் ஆண்டு முழுமை பெற்றது. அப்போது இவை வில்லார்ட் வீடுகள் என்று அழைக்கப்பட்டன.
563 அடி உயரத்தில், 51 மாடிகளைக் கொண்ட வானளாவிய ஐகானிக் ஓட்டல் கட்டடமாகும்.
1992 வரை ஹெல்ம்ஸ்லியால் நடத்தப்பட்டது. மிகச்சிறப்பாக இயங்கிய இந்த ஓட்டல் திவால் நடவடிக்கையின் காரணமாக, 1993 இல் புருனே சுல்தானுக்கு விற்கப்பட்டது , அவர் ஓட்டல் மற்றும் வில்லார்ட் ஹவுஸை முழுமையாகப் புதுப்பித்தார். 2000 களின் பிற்பகுதியில் அரச குடும்பத்திடம் இருந்து புருனே அரசாங்கம் ஓட்டலை எடுத்துக் கொண்டது.
பின்னர் அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் முதலீட்டு நிறுவனமான நார்த்வுட் இன்வெஸ்டர்ஸ், 2011ல் புருனே அரசாங்கத்திடம் இருந்து ஓட்டலை வாங்கி புதுப்பித்தது. ஹோட்டல் மீண்டும் 2015 இல் கொரிய சொகுசு ஓட்டல் ஆபரேட்டர் லொட்டே ஓட்டல் & ரிசார்ட்ஸுக்கு விற்கப்பட்டது. அதற்கு பிறகுதான் இது லொட்டே நியூயார்க் பேலஸ் ஓட்டல் என மறுபெயரிடப்பட்டது.
2021 ஆம் ஆண்டு நிலவரப்படி , ஓட்டலில் 909 அறைகள் உள்ளன. இதில் 822 விருந்தினர் அறைகள், 87 தனி அறைகள். மாற்றுத்திறனாளி விருந்தினர்களுக்காக பிரத்யேகமாக 72 அறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 800-க்கும் மேற்பட்ட அறைகள் பட்டு கம்பள விரிப்பு வசதிகளுடன் உள்ளன. இந்த ஓட்டலில் ஒரு இரவுக்கு ₹48,000 முதல் ₹12.15 லட்சம் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது.
இந்தியாவுக்கு மிகவும் பிரகாசமான எதிர்காலம் உள்ளது-அமெரிக்க வானியல் இயற்பியலாளர்
நியூயார்க்கில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த அமெரிக்க வானியல் இயற்பியலாளர் நீல் டி கிராஸ் டைசன், "இந்தியாவுக்கு மிகவும் பிரகாசமான எதிர்காலம் இருப்பதை காண்கிறேன் என கூறினார்.
என்னைப் பொறுத்தவரை வானமே எல்லை அல்ல" என்ற தனது புத்தகத்தை டைசன் பிரதமர் மோடிக்கு வழங்கினார்.
பின்னர் இருவரும் சிரித்துப் பேசி புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுத்தனர்.