21-ந் தேதி ஐ.நா. தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் யோகா நிகழ்ச்சி
ஐ.நா. தலைமையகத்தில் 21-ந் தேதி நடைபெறும் யோகா தின நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார்.
புதுடெல்லி,
கடந்த 2014-ம் ஆண்டு ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, யோகாவின் பலன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் சர்வதேச யோகா தினம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதை ஏற்று, ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி, சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று ஐ.நா. அறிவித்தது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் முறையாக இத்தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், வருகிற 21-ந் தேதி, 9-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. அன்று நியூயார்க் நகரில் நடக்கும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். அவர் ஐ.நா. தலைமையகத்தில் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுவே முதல்முறை ஆகும்.
இதை சுட்டிக்காட்டி, ஐ.நா. பொதுச்சபையின் 77-வது அமர்வின் தலைவர் கசபா கொேராசி, தனது 'டுவிட்டர்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
அடுத்த வாரம், ஐ.நா. தலைமையகத்தில் பிரதமர் மோடியுடன் 9-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அதற்கு பிரதமர் மோடி, தனது 'டுவிட்டர்' பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
ஐ.நா. தலைமையகத்தில் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் உங்களை சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன். உங்கள் பங்கேற்பு, அந்த நிகழ்ச்சியை மேலும் சிறப்பானதாக ஆக்கும்.
நல்ல உடல்நிலையையும், ஆரோக்கியத்தையும் உருவாக்க உலகத்தையே யோகா ஒன்று சேர்த்துள்ளது. உலகளவில் அது மேலும் பிரபலமாகும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மற்றொரு பதிவில், பல்வேறு ஆசனங்களை விளக்கும் வீடியோ ஒன்ைற பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
யோகா, உடலுக்கும், மனதுக்கும் மிகுந்த நன்மைகளை அளிக்கிறது. வலிமை, நெகிழ்வுத்தன்மை, அமைதியை அளிக்கிறது. நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக யோகாவை ஆக்குவதுடன் உடல்நலத்தையும், அமைதியையும் மேம்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பின்பேரில் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, ஐ.நா. நிகழ்ச்சிக்கு பிறகு, 22-ந் தேதி, அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பேசுகிறார். அதே நாள் இரவு, மோடிக்கு ஜோ பைடன் விருந்து அளிக்கிறார்.