கர்நாடகத்துடன் எல்லை பிரச்சினை: மராட்டியம் வரும் பிரதமர் அவரது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டும் - உத்தவ் தாக்கரே
இன்று மராட்டியம் வரும் பிரதமர் மோடி கர்நாடக எல்லை பிரச்சினையில் அவரது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.;
உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்
பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாக்பூர் வருகிறார். இந்த நிலையில் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் முதல்-மந்திரி உத்தவ்தாக்கரே பேசியதாவது:-
நாக்பூர் - மும்பை விரைவு சாலையை திறந்து வைக்க பிரதமர் மோடி வருகை தர உள்ளார்.
அவரை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் மராட்டியம் வரும் போது, அவர் மராட்டிய - கர்நாடக எல்லை பிரச்சினையில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பசவராஜ் பொம்மைக்கு கண்டனம்
இதேபோல மராட்டிய எம்.பி.க்கள், அமித்ஷாவை சந்தித்ததால் எல்லை பிரச்சினையில் எந்த மாற்றமும் ஏற்படபோவதில்லை என கூறியுள்ள கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு மகாவிகாஸ் அகாடி கூட்டணி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக அமித்ஷாவை சந்தித்த எம்.பி.க்கள் குழுவில் இடம்பெற்று இருந்த உத்தவ் தாக்கரே சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் கூறுகையில், " அமித்ஷா எங்களின் கோரிக்கையை கவனமாக கேட்டார். 2 மாநில முதல்-மந்திரிகளையும் அழைத்து பேசுவதாக கூறினார். ஆனால் பசவராஜ் பொம்மையின் பேச்சு, அவர் மத்திய அரசை மதிப்பது இல்லை என்பதை காட்டுகிறது. 2023-ம் ஆண்டு கர்நாடகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு இதுபோன்ற கருத்துக்கள் கூறப்படுகின்றன " என்றார்.