குஜராத்தில் ரூ.21,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

இந்தியாவின் வளர்ச்சிக்கு பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது முக்கியமானது என்று குஜராத்தில் ரூ.21 ஆயிரம் கோடி திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி கூறினார்.

Update: 2022-06-18 17:35 GMT

ரூ.21 ஆயிரம் கோடி திட்டங்கள்

குஜராத் மாநிலம், வதோதராவில் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் பேசினார். மாநில முதல்-மந்திரி பூபேந்திரபாய் படேல் மற்றும் மத்திய மந்திரிகள் முன்னிலையில் நடந்த இந்த விழாவில், பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:-

ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த திட்டங்கள், குஜராத் வளர்ச்சியின் வழியே இந்தியாவின் வளர்ச்சி என்ற கருத்துக்கு வலு சேர்க்கும். மகப்பேறு மருத்துவம், ஏழைகள், இணைப்பினை ஏற்படுத்துதல், உயர் கல்வி போன்ற திட்டங்களில் பெரிய அளவில் செய்யப்படுகிற இந்த முதலீடுகள், குஜராத்தின் தொழில் வளர்ச்சிக்கு மாபெரும் ஊக்கமாக அமையும். இந்த திட்டங்களில் பல, சுகாதாரம், ஊட்டச்சத்து, பெண்களுக்கு அதிகாரம் வழங்கல் தொடர்பானவை ஆகும்.

பெண்களுக்கு அதிகாரம் முக்கியம்

பெண்களின் வேகமான வளர்ச்சி, அவர்களுக்கு அதிகாரம் வழங்குதல் என்பது இந்தியாவில் 21-ம் நூற்றாண்டின் விரைவான வளர்ச்சிக்கு சமமான முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

இன்றைக்கு இந்தியா பெண்களின் அபிலாசைகள், தேவைகளை கருத்தில் கொண்டு திட்டங்களை போடுகிறது. முடிவுகளை எடுக்கிறது. ஆயுதப்படைகள் தொடங்கி சுரங்கத்துறை வரையில் பெண்கள் விரும்புகிற துறையை தேர்ந்தெடுத்துக்கொள்கிற வகையில் அதற்கான வாயில்களை எனது அரசு திறந்து விட்டுள்ளது.

பெண்களின் வாழ்க்கை சுழற்சியின் எல்லா கட்டங்களையும் கருத்தில் கொண்டு நாங்கள் பல புதிய திட்டங்களை உருவாக்கி உள்ளோம். பெண்களின் கஷ்டங்களை குறைத்து, அவர்கள் முன்னோக்கி செல்வதற்கான வாய்ப்புகளை வழங்கி, அவர்கள் வாழ்க்கையை எளிதாய் ஆக்குவது எங்கள் அரசின் முதல் முன்னுரிமை ஆகும்.

நேர்மறையான முடிவுகள்

உடல்நலக்குறைவு ஒரு தாயை மட்டுமல்ல, வரும் தலைமுறைகளையும் (குழந்தைகளையும்) பாதிக்கிறது. குழந்தையின் வாழ்க்கையையும் இது நிர்ணயிக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பாக குஜராத்தில் நான் முதல்-மந்திரி பதவிக்கு வந்தபோது, ஊட்டச்சத்து குறைபாடு மிகப்பெரும் சவாலாக இருந்தது.

அதிலிருந்து, அரசு ஒன்றன் பின் ஒன்றாக நடவடிக்கைகள் எடுத்து, இந்த இலக்கில் செயல்படத்தொடங்கியது. அதன் நேர்மறையான முடிவுகளை இன்று பார்க்க முடிகிறது. நான் இப்போது தொடங்கி வைத்துள்ள ரூ.800 கோடி மதிப்பிலான முதல்-மந்திரி மாத்ருசக்தி யோஜனா திட்டம், தாய்மைப்பேற்றின் ஆரம்ப நாட்களில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துணவை உறுதி செய்கிறது.

போஷண் சுதா யோஜனா திட்டம், பழங்குடியின மக்கள் ஆதிக்கம் செலுத்துகிற பகுதிகளில் உள்ள கர்ப்பிணிகளின் ஊட்டச்சத்து தேவையை தீர்க்கிறது. குஜராத் எப்போதுமே ஊட்டச்சத்து பிரச்சினைக்கு செவி சாய்த்து வந்துள்ளது. டூத் சஞ்சீவினி யோஜனா போன்ற பல திட்டங்களை செயல்படுத்துகிறது. இது நாட்டுக்கே வழிகாட்டுகிறது. இத்தகைய திட்டங்களால் பலன்பெறுவோர் எண்ணிக்கை சுமார் 58 லட்சம் ஆகும். எல்லா மட்டத்திலும், பெண்களை மேம்படுத்துவதற்கு, முடிவு எடுக்கிற இடங்களில் அவர்களுக்கு வாய்ப்பு தர முயற்சி செய்திருக்கிறோம். பெண்களின், நிர்வாகத்திறனை புரிந்துகொண்டு, கிராம அளவில் பல திட்டங்களில் தலைமைத்துவ பங்களிப்பை சகோதரிகளுக்கு கொடுத்து இருக்கிறோம்.

பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வீடுகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் அவர்கள் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகளுக்கு அதிபதிகள் ஆகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவிலை திறந்து வைத்தார், பிரதமர்

குஜராத்தில் பஞ்சமகால் மாவட்டத்தில் பவகத் மலையில் புகழ்பெற்ற மகாகாளி கோவிலில் 500 ஆண்டுகளாக இருந்த தர்கா, அதன் பராமரிப்பாளர்கள் ஒப்புதலுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

அங்கு அவர் பாரம்பரியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது அவர் பேசும்போது, "5 நூற்றாண்டுகளாக, அதுவும் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாக மகாகாளி கோவிலின் உச்சியில் ஏற்றப்படாத கொடி இப்போது ஏற்றப்பட்டுள்ளது. இந்த கோவிலில் கொடி ஏற்றி இருப்பது நமது ஆன்மிக அடையாளம் மட்டுமல்ல, பல நூற்றாண்டுகள் சென்றாலும், யுகங்கள் மாறினாலும் நமது நம்பிக்கை நிலைத்திருக்கிறது என்பதை சொல்கிறது" என பெருமிதத்துடன் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்