சூடானில் இருந்து மீட்கப்பட்ட பழங்குடி மக்களுடன் உரையாடிய பிரதமர் மோடி
ஆபரேசன் காவிரி திட்டத்தின் கீழ் சூடானில் இருந்து மீட்கப்பட்ட ஹக்கி பிக்கி பழங்குடியின மக்களுடன் பிரதமர் மோடி உரையாடினார்.;
சிவமொக்கா,
கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 10-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், பிரசாரம் மேற்கொள்வதற்காக கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி பிரதமர் மோடி கர்நாடகா சென்றார். தொடர்ந்து அவர், இன்று 7-வது நாளாக பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இதன்படி, பிரதமர் மோடி பெங்களூருவில் நேற்று 26 கி.மீ. தூரத்திற்கு ஊர்வலம் மேற்கொண்டார். இதனை தொடர்ந்து 2-வது நாளான இன்று மத்திய பெங்களூரு வழியே 10 கி.மீ. கடந்து சென்ற அவரது ஊர்வலம் 5 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி இருந்தது.
இந்த பிரசாரத்தின் ஒரு பகுதியாக, மத்திய அரசின் ஆபரேசன் காவிரி திட்டத்தின் கீழ் சூடான் நாட்டில் இருந்து மீட்கப்பட்ட ஹக்கி பிக்கி பழங்குடியின மக்களுடன் பிரதமர் மோடி இன்று உரையாடினார்.
இந்த சந்திப்பின்போது, சரியான தருணத்தில், பாதுகாப்பாக தங்களை வெளியேற்றி அரசு நடவடிக்கை எடுத்ததற்காக பிரதமர் மோடிக்கு அவர்கள் நன்றியை தெரிவித்து கொண்டனர். சூடானில் சந்தித்த கடினம் வாய்ந்த சூழ்நிலைகளை அவர்கள் அப்போது நினைவு கூர்ந்தனர். அரசும், இந்திய தூதரகமும் எப்படி தங்களை பாதுகாத்தன என்றும் கூறினர்.
இதன்பின்னர் பிரதமர் மோடி பேசும்போது, சில அரசியல்வாதிகள் இதனை அரசியலாக்க முயற்சித்தனர். ஆனால் எங்களுக்கு என்ன வருத்தம் என்றால், இந்தியர்கள் எங்கே மறைந்து உள்ளனர் என அவர்கள் வெளிப்படுத்தி விட்டால், அது இந்தியர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தி விடும்.
அதனால், அரசு ஒவ்வொருவரின் பாதுகாப்பையும் அமைதியாக பணி செய்து உறுதிப்படுத்தி உள்ளது என்று கூறியுள்ளார். இந்த தருணத்தில் அவர்களுக்கு உற்ற துணையாக இருந்த, நாட்டின் வலிமையை நினைவில் வைத்து கொள்ளும்படி கூறிய அவர், பிரச்சனையில் இருப்பவர்களுக்கு உதவ எப்போதும் தயாராக இருக்கும்படியும், சமூகம் மற்றும் நாட்டுக்கு பங்காற்றும்படியும் கேட்டு கொண்டார்.