பிரபல நகைச்சுவை நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

பிரபல நகைச்சுவை நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-21 08:48 GMT

புதுடெல்லி,

பாலிவுட்டில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் அறியப்படுபவர் நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா (வயது 59). பிரபல ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சியான, தி கிரேட் இந்தியன் லாஃப்டர் சேலஞ்ச் முதல் சீசனில் பங்கேற்று அதன்மூலம் அங்கீகாரம் பெற்ற இவர், மெயினி பியார் கியா, பாஸிகர், பிக் பிரதர், பாம்பே டூ கோவா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி காலை டெல்லியில் உள்ள ஜிம் ஒன்றில் ராஜூ ஶ்ரீவஸ்தவா உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்தார். அதன்பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். 40 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில் ராஜூ ஸ்ரீவஸ்தவா இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜூ ஶ்ரீவஸ்தவா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ராஜு ஸ்ரீவஸ்தவா சிரிப்பு, நகைச்சுவை மற்றும் நேர்மறை உணர்ச்சிகள் மூலமாக நம்முடைய வாழ்க்கையை பிரகாசமாக்கினார். அவர் மிக விரைவாக நம்மை விட்டு பிரிந்து விட்டார். ஆனால் அவர் பல ஆண்டுகளாக அவரது செழுமையான பணியால் எண்ணற்ற மக்களின் இதயங்களில் தொடர்ந்து வாழ்வார். அவரது மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உத்தர பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்