கர்நாடகத்தில் பிரதமர் மோடி 3 நாள் சூறாவளி பிரசாரம்

சட்டசபை தேர்தலையொட்டி கர்நாடகத்தில் பிரதமர் மோடி 3 நாட்கள் முகாமிட்டு சூறாவளி பிரசாரம் செய்ய உள்ளார். பெங்களூருவில் 2 நாட்கள் அவர் திறந்த வாகனத்தில் ஊர்வலம் செல்ல உள்ளார்.

Update: 2023-05-04 23:02 GMT

பெங்களூரு:-

தலைவர்கள் தீவிர பிரசாரம்

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க பிரதமர் மோடி, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தீவிரம் காட்டி வருகிறார்கள். சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு பா.ஜனதா தேசிய தலைவர்கள், மத்திய மந்திரிகள், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்கள்.

குறிப்பாக பிரதமர் மோடி கடந்த மாதம்(எப்ரல்) 29-ந் தேதியும், 30-ந் தேதியும், அதன்பிறகு, கடந்த 2-ந் தேதி, 3-ந் தேதி என 4 நாட்கள் சூறாவளி பிரசாரம் செய்திருந்தார். அதாவது பொதுக்கூட்டங்கள், பெங்களூரு, மைசூரு, கலபுரகியில் திறந்த வாகனத்தில் ஊர்வலம் சென்று பிரதமர் மோடி பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

கர்நாடகத்தில் 3 நாட்கள் முகாம்

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால், தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், பிரதமர் மோடி கர்நாடகத்தில் 3 நாட்கள் முகாமிட்டு சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். பெங்களூருவில் நாளை(சனிக்கிழமை) ஒரே நாளில் 36 கிலோ மீட்டர் தூரத்துக்கு திறந்த வாகனத்தில் ஊர்வலம் நடத்தி பிரதமர் மோடி பிரசாரம் செய்வதாக இருந்தது. ஆனால் பெங்களூருவில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவில் மழை பெய்து வருகிறது.

அதனால் வருகிற 6-ந் தேதி (நாளை) மாலையில் இருந்து இரவு வரை பிரதமர் மோடி ஊர்வலம் செல்லும் போது மழை வந்தால், ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இதையடுத்து, பெங்களூருவில் பிரதமர் மோடி நாளை ஒரு நாள் மட்டும் ஊர்வலம் செல்ல இருந்ததற்கு பதிலாக, வருகிற 7-ந் தேதியும் சேர்த்து, 2 நாட்கள் திறந்த வாகனத்தில் ஊர்வலம் செல்வார் என்று பா.ஜனதா அறிவித்துள்ளது. இதுகுறித்து பெங்களூருவில் மத்திய மந்திரி ஷோபா நிருபர்களிடம் கூறியதாவது:-

2 நாட்கள் ஊர்வலம்

சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி நாளை (அதாவது இன்று) கர்நாடகம் வருகை தர உள்ளார். இன்று மதியம் 2 மணிக்கு பல்லாரியிலும், 4.30 மணிக்கு துமகூரு புறநகர் தொகுதியிலும் பா.ஜனதா பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார். வருகிற 6-ந் தேதி(நாளை) காலை 10 மணியில் இருந்து மதியம் 1.30 மணி வரை திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி ஊர்வலம் செல்ல உள்ளார். பெங்களூரு திப்பசந்திராவில் உள்ள கெம்பேகவுடா சிலையில் இருந்து பிரிகேட் ரோடு வரை இந்த ஊர்வலம் நடைபெற இருக்கிறது.

இந்த ஊர்வலத்தை முடித்து விட்டு அன்றைய தினம் மாலை 4 மணிக்கு பாகல்கோட்டை மாவட்டம் பாதாமியிலும், இரவு 7 மணிக்கு ஹாவேரி மாவட்டத்தில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்திலும் பிரதமர் பேச உள்ளார். வருகிற 7-ந் தேதி(நாளை மறுநாள்) காலை 10 மணியில் இருந்து மதியம் 1.30 மணிவரை பெங்களூருவில் பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் ஊர்வலம் செல்ல இருக்கிறார். பிரிகேட் ரோட்டில் இருந்து மல்லேசுவரம் சாங்கி டாங்கி ஏரி வரை இந்த ஊர்வலம் நடைபெற உள்ளது.

மக்கள் பாதிக்கப்படுவார்கள்...

வருகிற 7-ந் தேதி மாலை 4 மணிக்கு சிவமொக்காவிலும், இரவு 7 மணிக்கு மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார். பெங்களூருவில் 17 தொகுதிகளுக்கு பிரதமர் மோடி ஊர்வலம் செல்ல உள்ளார்.

பெங்களூருவில் ஒரே நாளில் பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் ஊர்வலம் செல்லும் போது, மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், 2 நாட்களுக்கு ஊர்வலம் மாற்றப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடியின் தொடர் பிரசாரத்தால் பா.ஜனதாவுக்கு ஆதரவான அலை மக்களிடையே வீசுவதாக கூறப்படுகிறது. இதன்மூலம் பா.ஜனதாவுக்கு பலம் கிடைத்திருப்பதாக அக்கட்சியினர் கூறுகிறார்கள். குஜராத் பாணியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சியை அமைத்திட பிரதமர் மோடி கடுமையாக உழைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் பாதிக்கப்பட கூடாது என பிரதமர் வேண்டுகோள்

சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி பெங்களூருவில் ஒரே நாளில் 36 கிலோ மீட்டர் ஊர்வலம் செல்வதாக இருந்தது. ஆனால் மக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது வண்ணம் என்னுடைய ஊர்வலம் இருக்க வேண்டும், பெங்களூரு மிகப்பெரிய நகரம், இங்கு போக்குவரத்து நெரிசல் பிரச்சினை ஏற்படுகிறது. அதனால் என்னுடைய ஊர்வலத்தின் போது பெங்களூரு மக்கள் பாதிக்ககூடாது என்று பிரதமர் மோடி கூறியதாக பா.ஜனதா எம்.பி. தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்