மும்பை- நாக்பூர் இடையேயான முதற்கட்ட விரைவு சாலை; இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் மோடி

மும்பை-நாக்பூர் இடையே அமைக்கப்படும் விரைவு சாலையின் முதற்கட்ட சாலைப்பணி நிறைவு பெற்றுள்ள நிலையில், அதனை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும் வந்தே பாரத் ரெயில் சேவையையும் அவர் தொடங்கி வைக்கிறார்.;

Update:2022-12-11 04:59 IST

மராட்டிய தலைநகர் மும்பையும், மாநிலத்தின் 2-வது தலைநகராக விளங்கும் நாக்பூரையும் விரைவு சாலை மூலம் இணைக்க திட்டமிடப்பட்டது.

701 கி.மீ. விரைவு சாலை

கடந்த பா.ஜனதா- சிவசேனா கூட்டணி ஆட்சியின் போது, இதற்காக மும்பை- நாக்பூர் இடையே 701 கிலோ மீட்டர் தூர விரைவு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இது அப்போதைய முதல்-மந்திரியும், தற்போதைய துணை முதல்-மந்திரியுமான தேவேந்திர பட்னாவிசின் கனவு திட்டமாகும்.

இந்த விரைவு சாலைக்கு மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே பெயர் சூட்டப்பட்டுள் ளது. 6 வழிப்பாதையான இந்த சாலை திட்டத்தில் முதற்கட்டமாக நாக்பூர் - ஷீரடி இடையே 520 கி.மீ. பணிகள் முடிவடைந்துள்ளன. நிறைவு பெற்ற இந்த விரைவு சாலையை பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறார். இதற்கான விழா நாக்பூரில் நடக்கிறது. மேலும் நாக்பூரில் பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.

இன்று காலை வருகிறார்

இதற்காக பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் காலை 9.40 மணிக்கு நாக்பூர் வருகிறார். அவர் நாக்பூர் அம்பேத்கர் விமான நிலையத்தில் இருந்து, நாக்பூர் ரெயில் நிலையம் செல்கிறார். அங்கு அவர் நாக்பூர் - பிலாஸ்பூர் இடையே நாட்டின் அதிவேக வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

மேலும் அவர் ரூ.1,500 கோடி மதிப்பிலான ரெயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து அவர் நாக்பூரில் முதல் கட்ட மெட்ரோ ரெயில் சேவையையும் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். அதை தொடா்ந்து 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் கலந்து கொள்கிறார்.

இதையடுத்து நாக்பூர்- ஷீரடி விரைவு சாலையை மக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கிறார்.

எய்ம்ஸ் ஆஸ்பத்திரி

இதேபோல நாக்பூர் மிகான் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையையும் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பிரதமர் மோடி இன்று நாக்பூரில் சுமார் ரூ.75 ஆயிரம் கோடி மதிப்பிலான முடிவடைந்த திட்டங்கள் மற்றும் திட்டப்பணிகளை தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த விழாக்களில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

நாக்பூரில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு பிரதமர் மோடி கோவா புறப்பட்டு செல்கிறார்.

பலத்த பாதுகாப்பு

இந்தநிலையில் பிரதமர் மோடி வருகையையொட்டி நாக்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாக்பூரில் பிரதமர் மோடிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நாக்பூர் நகர போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமார் இறுதி செய்தார். சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். போலீசாருடன் அதிவிரைவு படையினர், கலவர தடுப்பு பிரிவினர், ஊர்க்காவல் படையினர் போன்ற மற்ற பிரிவு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மோடி திறந்து வைக்க உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் மட்டும் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை நேற்று போலீஸ் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு வீரர்களும் (எஸ்.பி.ஜி.) பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்