கெஜ்ரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சதித்திட்டம்; சவுரப் பரத்வாஜ் பரபரப்பு குற்றச்சாட்டு

ஆம் ஆத்மியை சேர்ந்த சவுரப் பரத்வாஜ் இன்று கூறும்போது, திகார் சிறைக்குள்ளேயே வைத்து மெல்ல மரணம் அடைய செய்வதற்கான சூழலுக்கு கெஜ்ரிவால் தள்ளப்பட்டு உள்ளார் என பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

Update: 2024-04-20 09:39 GMT

புதுடெல்லி,

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியா மற்றும் மந்திரியாக இருந்த சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். எனினும், 6 மாத சிறைவாசத்திற்கு பின்னர் சஞ்சய் சிங்கிற்கு சமீபத்தில் ஜாமீன் கிடைத்தது.

இந்த வழக்கில், டெல்லி முதல்-மந்திரி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ல் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, வருகிற செவ்வாய் கிழமை (23-ந்தேதி) வரை அவருடைய காவலை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது. கெஜ்ரிவாலுக்கு உடல்நல பாதிப்புகளை முன்னிட்டு, வீட்டில் இருந்து உணவு கொண்டு வர அவருடைய தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால், வீட்டில் இருந்து எடுத்து வரப்படும் உணவு, படுக்கை விரிப்புகள், மருந்துகள் உள்ளிட்டவற்றை பெறுவதற்கு அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

எனினும், டைப்-2 வகை நீரிழிவு நோயாளியான கெஜ்ரிவால் அதற்கான மருந்துகளை எடுத்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்நிலையில், அவர் காணொலி காட்சி வழியே தன்னுடைய குடும்ப மருத்துவரிடம் பேசினார். அப்போது அவர், இன்சுலின் வேண்டும் என்று கேட்டு கொண்டார். எனினும், சிறை நிர்வாகம் இதற்கு அனுமதி மறுத்து விட்டது என கூறப்படுகிறது.

இதுபற்றி பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது அக்கட்சியின் செய்தி தொடர்பாளரான சவுரப் பரத்வாஜ் இன்று கூறும்போது, திகார் சிறைக்குள்ளேயே வைத்து மெல்ல மரணம் அடைய செய்வதற்கான சூழலுக்கு டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் தள்ளப்பட்டு உள்ளார்.

கெஜ்ரிவால் மெதுவாக மரணம் அடைவதற்கான சதித்திட்டம் ஒன்று நடந்து வருகிறது என முழு பொறுப்புணர்வுடன் கூற விரும்புகிறேன் என்று பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.

இதேபோன்றதொரு குற்றச்சாட்டை ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கும் கூறியுள்ளார். சிறையில் கெஜ்ரிவாலுக்கு எதுவும் நடக்கலாம். அவருக்கு எதிராக கடுமையான சதி உள்ளது. அவரை சிறையிலேயே கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்படுகிறது என்று கூறினார். இதேபோல், டெல்லி மந்திரி அதிஷி கூறும்போது, கெஜ்ரிவாலுக்கு வீட்டில் சமைத்த உணவு, இன்சுலின் போன்றவை மறுக்கப்பட்டு உள்ளது என்று குற்றம் சாட்டியிருந்தது கவனிக்கத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்