கப்பன் பூங்காவில் வளர்ப்பு நாய்களுக்கு தடை விதிக்கும் திட்டம் நிறுத்தி வைப்பு
கப்பன் பூங்காவில் வளர்ப்பு நாய்களுக்கு தடை விதிக்கும் திட்டத்தை தோட்டக்கலைத்துறை நிறுத்தி வைத்து உள்ளது.
பெங்களூரு: கப்பன் பூங்காவில் வளர்ப்பு நாய்களுக்கு தடை விதிக்கும் திட்டத்தை தோட்டக்கலைத்துறை நிறுத்தி வைத்து உள்ளது.
வளர்ப்பு நாய்களுக்கு தடை
பெங்களூரு விதான சவுதா அருகே உள்ள கப்பன் பூங்காவுக்கு வார இறுதி நாட்களில் வருபவர்கள் தங்கள் வளர்த்து வரும் செல்ல பிராணிகளை அழைத்து வருவது வழக்கம். பெரும்பாலாேனார் வளர்ப்பு நாய்களுடன் கப்பன் பூங்காவில் நடைபயிற்சி செய்வார்கள். ஆனால் பூங்காவுக்கு அழைத்து வரப்படும் வளர்ப்பு நாய்களால் இடையூறு ஏற்படுவதாக பூங்காவில் நடைபயிற்சி செய்பவர்கள் தோட்டக்கலைத்துறைக்கு புகார்கள் அளித்தனர்.
கடந்த 6 மாதங்களில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்ததால் ஜூலை 1-ந் தேதி முதல் கப்பன் பூங்காவுக்கு வளர்ப்பு நாய்களை அழைத்து வர தடை விதிக்க தோட்டக்கலைத்துறை முடிவு செய்து இருந்தது. இதற்கு வளர்ப்பு நாய்களுடன் நடைபயிற்சி செல்பவர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். தோட்டக்கலைத்துறை தனது முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி ஆன்லைன் மூலம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
திட்டம் நிறுத்தி வைப்பு
இந்த நிலையில் கப்பன் பூங்காவில் வளர்ப்பு நாய்களை தடை செய்வது குறித்து தோட்டக்கலைத்துறை மந்திரி முனிரத்னா அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் பெங்களூரு மத்திய தொகுதி எம்.பி. பி.சி.மோகன் கலந்து கொண்டார். அவர் கப்பன் பூங்காவில் வளர்ப்பு நாய்களுக்கு தடை விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று மந்திரி முனிரத்னாவிடம் வலியுறுத்தினார்.
இதையடுத்து வளர்ப்பு நாய்களுக்கு தடை விதிக்கும் திட்டம் குறித்து பரிசீலனை செய்வதாக மந்திரி முனிரத்னா கூறினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் கப்பன் பூங்காவில் வளர்ப்பு நாய்களுக்கு தடை விதிக்கும் திட்டத்தை தோட்டக்கலைத்துறை நிறுத்தி வைத்து உள்ளது. இதனால் கப்பன் பூங்காவுக்கு வளர்ப்பு நாய்களுடன் நடைபயிற்சி வருபவர்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.