இலங்கையில் உள்ள இந்திய மீனவர்களை மீட்க கோரிய பொதுநல மனு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
இலங்கையில் உள்ள இந்திய மீனவர்களை மீட்க கோரிய பொதுநல மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
புதுடெல்லி,
இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி கே.கே.ரமேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அனிருதா போஸ் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
மனுதாரர் கே.கே.ரமேஷ் சார்பில் வக்கீல் சி.ஆர்.ஜெயசுகின் ஆஜராகி இலங்கை சிறையில் இந்திய மீனவர்கள் பல ஆண்டுகளாக வாடி வருகின்றனர். பேச்சுவார்த்தை மூலம் அவர்களை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த பொதுநல வழக்கு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 9-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர். பொதுநல மனுவை மத்திய அரசு வக்கீலிடம் அளிக்கவும் மனுதாரருக்கு அனுமதி அளித்தனர்.