மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் நரேந்திர குமார் வர்மா தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், மதுரை தோப்பூர் உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று மத்திய அரசு கடந்த 2015 பிப்ரவரி 28-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்கி விட்டால் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை மத்திய அரசால் மேற்கொள்ள முடியாது என்றும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். எனவே இது போன்ற சூழலில் மக்கள் மனதில் எழுந்துள்ள குழப்பங்களுக்கும், சந்தேகங்களுக்கும் விடையளிக்கும் கடமை மத்திய அரசுக்கு உள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.