பி.எப்.ஐ. அமைப்பினர் மீது 10 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

பெங்களூரு கே.ஜி.ஹள்ளி வன்முறை வழக்கில் பி.எப்.ஐ. அமைப்பினர் மீது 10 ஆயிரத்து 196 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தாக்கல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2023-03-19 18:45 GMT

பெங்களூரு:-

கே.ஜி.ஹள்ளி வன்முறை

பெங்களூரு கே.ஜி.ஹள்ளி மற்றும் டி.ஜே.ஹள்ளியில் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வன்முறை சம்பவம் நடந்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாசமூர்த்தியின் வீடு, போலீஸ் நிலையம் மற்றும் வாகனங்களுக்கு ஒரு கும்பல் தீவைத்திருந்தனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து கே.ஜி.ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் கே.ஜி.ஹள்ளி வன்முறையில் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதப்பட்டதால், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கே.ஜி.ஹள்ளி வன்முறையில் பி.எப்.ஐ. (பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா) அமைப்புக்கு தொடர்பு இருப்பதும், அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தான் வன்முறையில் ஈடுபட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குற்றப்பத்திரிகை தாக்கல்

இதுதொடர்பாக பி.எப்.ஐ. அமைப்பின் தலைவர் நாசீர் பாஷா உள்பட 15 பேர் மீது என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அவர்களில் 9 பேர் மீது

மட்டும் யூ.ஏ.பி.ஏ. சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கே.ஜி.ஹள்ளி வன்முறை வழக்கில் பி.எப்.ஐ. அமைப்பை சேர்ந்த 15 பேர் மீதும் பெங்களூருவில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் 10 ஆயிரத்து 196 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளனர்.

பி.எப்.ஐ. அமைப்பினர் தட்சிண கன்னடா மாவட்டம் மிட்டூருவில், மிட்டூரு சுதந்திரம் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி, பலமுறை கூட்டங்கள் நடத்தி இருந்ததாகவும், உறுப்பினர் சேர்த்தல், பணம் திரட்டுதல் குறித்து பேசுவதை வழக்கமாக வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.4 கோடி பணம் திரட்டியது பற்றியும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. கே.ஜி.ஹள்ளி வன்துறையில் 2½ ஆண்டுக்கு பின்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்