ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க மறுப்பு: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து 'பீட்டா' அமைப்பு மனு - விரைவில் விசாரணை
ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை என்று தீர்ப்பு அளித்ததை மறுஆய்வு செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பீட்டா அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி,
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலக புகழ்பெற்றது. இதற்கிடையே கோர்ட்டு உத்தரவு காரணமாக ஜல்லிக்கட்டுக்கு இடையில் தடை ஏற்பட்டது.
இதை கண்டித்து தன்னெழுச்சியாக பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனையடுத்து தமிழ்நாடு அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்தது.
இதன் காரணமாக தமிழர் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.
தடை இல்லை
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து, கடந்த மே மாதம் 18-ந்தேதி தீர்ப்பு அளித்தது.
ஜல்லிக்கட்டுக்கு தடை இ்ல்லை என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.
மறுஆய்வு மனு
இதற்கிடையே இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி பீட்டா அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த அமைப்பு சார்பில் வக்கீல் பீரித்தா ஸ்ரீகுமார் கடந்த 1-ந்தேதி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
பரிசீலிக்கவில்லை
ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகள் இயற்கையான செயல்பண்புகளுக்கும், காளை, எருதுகளின் உடலமைப்பு, குணங்களுக்கும் எதிரானவை. மேலும் சொல்ல முடியாத அளவுக்கு வலி, வேதனையை அளிப்பதுடன், வதைக்கும் உள்ளாகின்றன.
2017 முதல் 2022-ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட கம்பாலா, ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் பார்த்து விரிவான ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இவற்றை சுப்ரீம் கோர்ட்டு பரிசீலிக்க தவறிவிட்டது.
மிகப்பெரிய சட்டத்தவறு
ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் சட்டத்தை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மிகப்பெரிய சட்டத் தவறை செய்துள்ளதுடன் நீதியும் தவறியுள்ளது.
நாகராஜா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பையும், ஐகோர்ட்டுகள் அளித்த தீர்ப்பையும் சுப்ரீம் கோர்ட்டு கருத்தில் கொள்ளவில்லை.
எனவே, ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்தையும், கம்பாலா போட்டிகளை அனுமதிக்கும் மராட்டிய, கர்நாடக அரசுகளின் சட்டம் செல்லும் என்ற தீர்ப்பையும் மறுஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மறுஆய்வு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.