கல்லூரி தேர்வுகளை கன்னடத்தில் எழுத அனுமதி

கர்நாடகத்தில் கல்லூரி தேர்வுகளை கன்னடத்தில் எழுத அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் கூறியுள்ளார்.

Update: 2022-12-14 21:11 GMT

பெங்களூரு:-

கன்னடத்தில் எழுத வாய்ப்பு

கர்நாடக மாநில உயர்கல்வி கவுன்சிலின் 23-வது கூட்டம் உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் அத்துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், டிகிரி கல்லூரிகளில் இளநிலை (பட்டப்படிப்பு) மற்றும் முதுநிலை (பட்ட மேற்படிப்பு) தேர்வுகள் ஆங்கிலத்துடன் கன்னடத்தில் எழுத வாய்ப்பு அளிப்பது என்று தீர்மானிக்கப்

பட்டது. இதுகுறித்து மந்திரி அஸ்வத் நாராயண் நிருபர்களிடம் கூறியதாவது:-

உயர்கல்வியில் கல்லூரிகளில் பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர்கள் தேர்வில் கேள்விகளுக்கு விரும்பினால் ஆங்கிலத்திலோ அல்லது கன்னடத்திலோ விடைகளை எழுத அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறை ஏற்கனவே பாலிடெக்னிக் கல்லூரிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய தேசிய கல்வி கொள்கையின்படி உயர்கல்வி படிப்புகள் உள்ளூர் மொழிகளில் வழங்கலாம். மேலும் உயர்கல்விக்கான பாடப்புத்தகங்கள் ஆங்கிலத்தில் இருந்து கன்னடத்தில் மொழிமாற்றம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டுப்புற பல்கலைக்கழகம்

இதற்காக ஒரு உயர்நிலை குழு அமைக்கப்படுகிறது. பழங்குடி மாணவர்கள் நாட்டுப்புற பல்கலைக்கழகத்தில் படிக்க ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. அவர்களுக்காக தனியாக ஒரு பழங்குடியின பல்கலைக்கழகம் தொடங்கும் முடிவு கைவிடப்படும். நல்லாட்சி நிர்வாக மாதத்தையொட்டி துணைவேந்தர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் தங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கல்லூரிகளுக்கு நேரில் சென்று மாணவர்களுடன் கலந்துரையாட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். உயர்கல்வி நிறுவனங்களில் அதிகளவில் ஆராய்ச்சி நடைபெற வேண்டும். இதற்காக அதிகம் செலவிட வேண்டும்.

இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.

இந்த கூட்டத்தில் அந்த கவுன்சில் துணைத்தலைவர் திம்மேகவுடா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்