கர்நாடக மக்கள் வெறுப்பு அரசியலை நிராகரித்து விட்டனர்...!! பரூக் அப்துல்லா கருத்து
கர்நாடக மக்கள் வெறுப்பு அரசியலை நிராகரித்து விட்டதாக பரூக் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.;
ஸ்ரீநகர்,
கர்நாடகத்தில் 16-வது சட்டசபையை தேர்ந்தெடுப்பதற்காக 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். ஆளும் பா.ஜனதா 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 207 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அடுத்த ஆண்டு(2024) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் 136 தொகுதிகளை கைப்பற்றி, அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. பாரதீய ஜனதாவும், மதசார்பற்ற ஜனதா தளமும் பின்னடைவை சந்தித்து இருக்கின்றன.
இந்நிலையில் கர்நாடக மக்கள் வெறுப்பு அரசியலை நிராகரித்து விட்டதாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், "வெறுப்பு அரசியலை நிராகரித்த கர்நாடக மக்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு உறுப்பினர்களையும் நான் வாழ்த்துகிறேன். இந்த வெற்றிக்காக உழைத்தவர்கள் மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் காங்கிரசின் முக்கியஸ்தர்கள். அவர்கள் அனைவரும் பிரச்சாரத்தின் போது மிகவும் கடினமாக உழைத்தனர். நாம் சகோதர அரசியலை ஊக்குவிக்க வேண்டும். பாரத் நடைபயணம் தேர்தல் முடிவுகளில் எதிரொலித்துள்ளது. கர்நாடக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி நிறைவேற்றும் என நம்புகிறேன்" என்று அவர் கூறினார்.