ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

விதிகளை மீறி பேனர் வைத்ததாக ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து பெங்களூரு மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2023-08-21 21:52 GMT

பெங்களூரு:

விதிகளை மீறி பேனர் வைத்ததாக ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து பெங்களூரு மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

பேனர் விவகாரம்

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் விதிகளை மீறி வைக்கப்படும் பேனர்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் பெங்களூரு நகரில் பேனர்கள் வைக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் அனுமதியின்றி சட்டவிரோதமாக பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதற்கிடையே பெங்களூரு நகர வளர்ச்சி துறையை தன்வசம் வைத்துள்ள துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் சமீபத்தில் பெங்களூருவில் நகர்வலம் மேற்கொண்டார். அப்போது சட்டவிரோதமாக பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

ரூ.50 ஆயிரம் அபராதம்

இந்த நிலையில், விதிகளை மீறி பேனர் வைத்ததாக ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெங்களூரு மாநகராட்சி அபராதம் விதித்துள்ளது. அதாவது, கர்நாடக காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் அணி சார்பில் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது, காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜீவ்காந்தி படத்துடன் பேனர் வைத்திருந்தனர். அவர்கள் விதிமுறைகளை மீறி பேனர் வைத்ததாக தெரிகிறது.

இதனால் மாநகராட்சி ஊழியர்கள் அந்த பேனரை அகற்றினர். மேலும், விதிகளை மீறி பேனர் வைத்ததாக காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தை கர்நாடக காங்கிரஸ் தலைவர் (டி.கே.சிவக்குமார்) செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி வழங்கிய ரசீதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்