ஆந்திர துணை முதல்-மந்திரியாக பவன் கல்யாண் நியமனம்
சந்திரபாபு நாயுடு தலைமையிலான மந்திரி சபையில் இடம்பெற்றுள்ள மந்திரிகளுக்கு இலாகா அறிவிக்கப்பட்டுள்ளது.;
அமராவதி,
ஆந்திர சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம், பா.ஜ.க., ஜனசேனா கூட்டணி அமோக வெற்றிபெற்றது. ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டசபை தொகுதிகளில் இந்த கூட்டணி 164 தொகுதிகளை கைப்பற்றியது.
இதையடுத்து, ஆந்திர முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். இதனை தொடர்ந்து ஆந்திர மந்திரி சபையில் யார் யாருக்கு பொறுப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. துணை முதல்-மந்திரியாக யார் நியமிக்கப்படுவார்? என்பது குறித்தும் எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையிலான மந்திரிசபையில் இடம்பெற்றுள்ள மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆந்திர துணை முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேசுக்கு மனிதவளத்துறை, ஐ.டி. மற்றும் தகவல் தொடர்புத்துறை வழங்கப்பட்டுள்ளது. ஆந்திர மந்திரிசபையில் மொத்தம் 25 பேர் இடம்பெற்றுள்ளனர்.