அவதூறு வழக்கில் ஆஜராக ராகுல் காந்திக்கு பாட்னா கோர்ட்டு சம்மன்
அவதூறு வழக்கில் வரும் ஏப்ரல் 12-ந்தேதி ஆஜராகும்படி பாட்னா கோர்ட்டு ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
பாட்னா,
பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, மக்களவை செயலகம் அவரது எம்.பி. பதவியை அதிரடியாக பறித்தது. இதன் தொடர்ச்சியாக, அரசு பங்களாவை காலி செய்ய கூறி, நோட்டீசும் அனுப்பப்பட்டது.
அடுத்தடுத்து நடந்து வரும் இந்த நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சியும் எதிர்வினையாற்றி வருகிறது. நாடாளுமன்றத்தில் அமளி, நாடாளுமன்ற வளாக பகுதியில் ஆர்ப்பாட்டம், கருப்பு தினம் கடைப்பிடிப்பது, கருப்பு சட்டை அணிந்து பேரணி செல்வது என தொடர்ச்சியாக அக்கட்சியினர் பல பகுதிகளிலும் போராட்டங்களில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி குறித்த மற்றொரு அவதூறு வழக்கில் கோர்ட்டில் ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு பாட்னா கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது. பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக பீகார் பா.ஜ.க.வின் சுஷில் குமார் மோடி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் வரும் ஏப்ரல் 12-ந்தேதி ஆஜராகும்படி பாட்னா கோர்ட்டு ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியுள்ளது.